அனுமதியின்றி வீட்டில் யானை தந்தங்கள் நடிகர் மோகன்லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

திருவனந்தபுரம்: யானை  தந்தங்களை வீட்டில் அனுமதியில்லாமல் வைத்திருந்தது தொடர்பாக பிரபல மலையாள  நடிகர் மோகன்லாலுக்கு எதிராக வனத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்துள்ளது .கடந்த 2011ம்  ஆண்டு ஜூலை 22ம் தேதி பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி  மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான  வரித்துறையினர் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை  நடத்தினர். இதில் கொச்சியில்  உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் லைசென்ஸ் இல்லாததால், மோகன்லாலுக்கு எதிராக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே  கடந்த காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த திருவஞ்சூர்  ராதாகிருஷ்ணன் யானை தந்தங்களை வைத்திருக்க மோகன்லாலுக்கு சிறப்பு அனுமதி  வழங்கினார். இதையடுத்து கேரள முதன்மை வனத்துறை  அதிகாரி மோகன்லாலுக்கு யானை  தந்தங்களை வைத்திருப்பதற்கான உரிமையாளர் சான்றிதழை வழங்கினார். இதையடுத்து  மோகன்லாலுக்கு எதிரான வனத்துறை பதிவுசெய்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.  இதை எதிர்த்து கொச்சியை சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம்  மோகன்லாலுக்கு எதிரான  வழக்கை உடனடியாக முடிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 7  ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வனத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்த  நிலையில் நேற்று முன்தினம் கோடநாடு வனத்துறை  அதிகாரி தனித்லால், பெரும்பாவூர்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மோகன்லால், அவருக்கு யானை தந்தம்  விற்ற 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்தார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: