15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லி நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி: எல்லையில் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: உபி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தினர். ஆனால், எல்லைப் பகுதியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பதற்றம் நிலவியது.பாரதிய கிஸான் சங்கத்தான் (பிகேஎஸ்) அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு பேரணியாக கடந்த 11ம் தேதி புறப்பட்டனர். சஹரன்பூரில் இருந்து புறப்பட்ட இவர்கள் நொய்டா வழியாக டெல்லி செல்ல  திட்டமிட்டனர். கரும்பு நிலுவைத் தொகை, கடன் நிவாரணம், இலவச மின்சாரம், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் அமலாக்கம் போன்ற 15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நொய்டாவில் இவர்களை அரசு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். அப்போது கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் பேரணியை கைவிடவும் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும்  எட்டப்படவில்லை. பேரணியைத் தொடர்ந்து நடத்திய அவர்கள் டெல்லி-காஜியாபாத் எல்லையை வந்தடைந்தனர். இதனால், காஜிப்பூர் எல்லைப் பகுதியில் இருந்து ேதசிய நெடுஞ்சாலை 24ல் நிஜாமுதீன் நோக்கி செல்லும் உபி கேட் 9ல் கடும்  போக்குவரத்து நெரிசல் நிலவியது. டெல்லியிலுள்ள மறைந்த பிரதமர் சரண்சிங்கின் நினைவிடத்தில் உள்ள கிஸான் காட் பகுதியில் பேரணி முடிவடைய இருந்தது.ஆனால், டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் பேரணியை போலீசார் நேற்று தடுத்து நிறுத்தினர். விவசாய சங்க பிரதிநிதி குழுவை மட்டுமே கிரிஷி பவனில் அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க முடியும் என போலீசார் திட்டவட்டமாக  கூறினர். இதையடுத்து, 11 பேர்அடங்கிய குழு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது. கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Stories: