நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் எதிரொலி திருச்சி, நெல்லை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

திருச்சி: தேனி மருத்துவ கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்ததுபோல, திருச்சி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்து உள்ளார்களா என சான்றிதழ்களும், ஹால்டிக்கெட் புகைப்படங்களும் ஆய்வு செய்யப்பட்டன.நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவன் உதித்சூர்யா சேர்ந்த விவகாரத்தை தொடர்ந்து, இவரை போன்று வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளனரா என்பதை அறிய தமிழக அரசு மருத்துவ  கல்லூரிகளில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 150 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதில், மாணவர்களின் கல்வி ஆவணங்கள், புகைப்படம், பிற சான்றிதழ்கள்  அனைத்தும் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

அத்துடன் நீட் தேர்வு எழுதியபோது பயன்படுத்திய ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படமும் ஒன்றுபோல உள்ளதா, வித்தியாசமாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. டீன் (பொ) அர்ஷியா  பேகம் தலைமையில் அனைத்து துறைத்தலைவர்களும் மாலை வரை  ஆய்வு பணியில் ஈடுபட்டனர். நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த 250 மாணவர்களின் சான்றுகளும் சரிபார்க்கும் பணி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் நடந்தது. முதல்வர் கண்ணன் உத்தரவின்பேரில்  துணை முதல்வர் சாந்தாராம் தலைமையில் பேராசிரியர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மாணவர்களை அழைத்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.

Related Stories: