×

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை: பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததா? என பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.  கோவை துணைவேந்தராக பணியாற்றிய கணபதி, உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே  அவருடைய பணிகாலம் மற்றும் அதற்கு முன்பு துணைவேந்தராக பணியாற்றிய ஜேம்ஸ் பிச்சை காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்த  குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகள் பல்கலைக்கழகத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அதில்  புதியதாக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனரா? அவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  மேலும் புதியதாக நியமிக்கப்பட்டவர்களிடமும்  விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. சோதனை செய்த அறைகளில் யாரையும், உள்ளே அனுமதிக்கவில்லை, வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் விடவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த சோதனை வழக்கமாக நடைபெறுவதுதான். பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் எப்படி நடந்தது என்று கண்டறியும் வரை சோதனை நடத்தப்படும்’’ என்றனர். சுமார் 7 மணி நேரம் நடந்த  திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது.

Tags : raids ,bribery cops ,Bribery University ,appointment ,Bharathiar University Bribery , irregularity , professor, appointment?, Bharathiar University
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...