ஜிஎஸ்டி மன்றத்தில் காய்ந்த புளி, மரத்தட்டுகள் மற்றும் தொன்னைகளுக்கு வரி விலக்கு: தமிழக அரசு தகவல்

சென்னை: ஜிஎஸ்டி மன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள 65 பொருட்கள் வரி குறைப்பு, வரி விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும் காய்ந்த புளி மற்றும் மரத்தட்டுகள் மற்றும்  மரத் தொன்னைகளுக்கு வரியிலிருந்து முழு விலக்களித்துள்ளது. இது குறித்து வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவாவில் நடைபெற்ற 37வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக்கூட்டத்தில் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் கொப்பரை, கரும்பு, வெல்லம் போன்றவையினை சேமித்து வைப்பது தொடர்பான சேவைகளுக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான காய்ந்த புளி மற்றும் மரத்தட்டுகள் மற்றும் மரத் தொன்னைகளுக்கு வரியிலிருந்து முழு விலக்களிக்கப்பட்டுள்ளது.சிப்பமிட பயன்படுத்துவதற்கான பாலிஎத்திலின் / பாலிப்ரோப்பலின் கொண்டு  செய்யப்படும் நெய்த அல்லது நெய்யப்படாத பைகள் மற்றும் சாக்கு பைகள் மீது ஒரே சீரான 12 சதவீதம் வரி விதித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் கருதி 1.7.2017 முதல் 30.9.2019 வரையிலான காலத்திற்கு மீன் துகள்களுக்கு முழு வரி விலக்கு வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இணக்க முறையில் வரி செலுத்துவோர்களால் ஆண்டு கணக்கு விவர அறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், ₹2 கோடி வரை விற்பனை அளவு  கொண்ட மற்ற வணிகர்களுக்கும்  கட்டாயமாக தாக்கல் செய்வதற்கு பதிலாக அவர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையில் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எளிமையாக்கப்பட்ட புதிய முறையில் மாதாந்திர கணக்கு விவர அறிக்கையினை தாக்கல் செய்வதற்கான வசதி வணிகர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்திட தமிழ்நாடு அரசால், ஜிஎஸ்டி மன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள 65 பொருட்கள் மற்றும் 5 சேவைகள் மீது வரி குறைப்பு செய்திடவும், வரி விலக்கு பெறவும், இனிவரும்  கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.  37வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டதற்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவரான மத்திய  நிதி அமைச்சருக்கு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் கொப்பரை, கரும்பு, வெல்லம் போன்றவையினை சேமித்து வைப்பது தொடர்பான சேவைகளுக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

Related Stories: