×

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் ஆண், பெண் காண்டாமிருகங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்

சென்னை: காண்டா மிருக தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் காண்டா மிருகங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படுகிறது. பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்கிற ஆண் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர்  பார்வையாளர்களுக்கு திறந்து  வைத்தார். இதனை தொடர்ந்து ஒரு பெண் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் மூன்று (1:2) கங்கை நீர் முதலைகளும் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா, பாட்னா, பீகாரிலிருந்து விலங்கு பரிமாற்றம் மூலம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொண்டு  வரப்பட்டன.மேற்கண்ட விலங்குகள் சாலை வழியாக 2500 கி.மீ. பாட்னாவிலிருந்து சென்னைக்கு பூங்காவின் சிறப்பு வாய்ந்த நிபுணர் குழுவான விலங்கு மருத்துவம், மேலாண்மையில் தேர்ச்சி பெற்ற விலங்கு மருத்துவர், உயிரியியலாளர் மற்றும் வன  அலுவலர்களால் சிறப்பு கவனம் மற்றும் பாதுகாப்புகள் கொடுத்து, கொண்டு வரப்பட்டன.  மத்திய உயிரியியல் பூங்கா ஆணையம், புதுடெல்லி விதிமுறைகள்படி இந்த விலங்குகள் பூங்காவின் நோய்த் தடுப்பு பகுதியில் வைத்து  பராமரிக்கப்பட்டன.

‘ரைன்’ என்று பெயர் சூட்டப்பட்ட 2 வயது காண்டாமிருகம் முதல்முறையாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பெண் காண்டாமிருகம் ஆகும்.  இந்த பெண் காண்டாமிருகம் பூங்கா கொடுத்த சிறப்பு  மேலாண்மையால் சென்னை சுற்றுச்சூழலுக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.இளமையான ரைன் பெண் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உலக காண்டாமிருக தினமான இன்று (22ம் தேதி) பார்வையாளர்கள் கண்டுகளிக்க திறக்கப்படுகிறது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா “உலக காண்டாமிருக தினம்” செப்டம்பர்  22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.   பல்வேறு போட்டிகள் மற்றும் மனங்கவரும் நிகழ்வுகள் பூங்காவில் நடத்தப்பட உள்ளது.  இந்நிகழ்வுகள் குறித்த விவரம் பூங்கா சமூகவலைத்தளத்தில் உள்ளது.  பொதுமக்கள் அனைவரும் போட்டிகளில்  கலந்து கொண்டு பரிசுகளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Visitors ,Vandalur Park ,Vandalur Park Visitors , Vandalur Park, Visitors ,spot male ,female rhinos
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!