×

வங்கிகள் இணைப்பை கண்டித்து 26, 27ல் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம்: 48 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கும்

சென்னை: வங்கிகள் இணைப்பை கண்டித்து, வருகிற 26, 27ம் தேதி வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் 48 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆர்.சேகரன் சென்னையில் நேற்று அளித்த ேபட்டி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 30ம் தேதி யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன், அலகாபாத் வங்கி இந்தியன்  வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.இந்த வங்கிகள் இணைப்பால் நாட்டிற்கோ, வங்கிகளுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. அண்மையில் ஸ்ேடட் வங்கியின் உறுப்பு வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.இதனால் எந்தவித முன்னேற்றமும், பலனும் ஏற்படவில்லை. 2 ஆயிரம் வங்கி கிளைகள் தான் மூடப்பட்டன. அதேபோல் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பும் எவ்வித குறிப்பிடத்தக்க பலனையும் அளிக்கவில்லை.

தற்போது மீண்டும் வங்கிகள் இணைப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள 1000 வங்கி கிளைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்க  போவதில்லை. பெரிய வங்கிகளை உருவாக்கினால் பெரிய நிறுவனங்கள்தான் பயன்பெறும். சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கி இணைப்பை கைவிட வேண்டும்.நடப்பு ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 23 மாதங்கள் ஆகிவிட்டது. புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைந்து நடத்தாமல் இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தை ஏற்றிக் கொண்டே போவது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26, 27ம் தேதிகளில் அகில இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 4 லட்சம் வங்கி அதிகாரிகளும்,  தமிழகத்தில் 40 ஆயிரம் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

அன்றைய தினம் வங்கிகள் திறந்து இருந்தாலும் எந்த பணியும் நடைபெறாது. வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 48 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனையும், தமிழகத்தில் 6 கோடி காசோலை  பரிவர்த்தனையும் முடங்கும். வங்கி அதிகாரிகளின் நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்டமாக நவம்பர் மாதம் 2வது வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஓஏ) மாநில செயலாளர் டி.எஸ்.கணேசன், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (ஐஎன்பிஓசி) மாநில செயலாளர் சூர்ய நாராயண ராவ், தேசிய வங்கி அதிகாரிகள்  அமைப்பு (என்ஓபிஓ) மாநில செயலாளர் எஸ்.ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags : Bank officials ,banks ,merger bank officials , Banks denounced , merger,48 thousand crores, check transaction ,freeze
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்