×

ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: 27ம் தேதி ஐநாவில் உரை

புதுடெல்லி: ‘ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து, பிரதமர் மோடி, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். வரும் 27ம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் அவர்  உரையாற்ற உள்ளார்.டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஹூஸ்டனில் நடைபெறும் ‘ஹவ்டி’ -  மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் முதல்முறையாக பங்கேற்பது மிகுந்த பெருமைக்குரியது; இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து, இருவரும் சந்தித்து பேசவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று பிரதமர் மோடி சென்றடைந்தார். இன்று டெக்சாஸில் நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார். இந்த  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து, 23ம் தேதி, ஐநா பொதுச்சபை கூட்டத்தில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்  விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். ஐநா பொதுச்சபையில் இந்திய தலைவர் ஒருவர் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை. ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஐநா சபை கட்டிடத்தின்  மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.  அதன்பின், 25ம் தேதி உலக தொழில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். அதன்பின், 27ம் தேதி ஐநா சபை பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இவரது உரையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரை  நிகழ்த்துகிறார். காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகி உள்ள நிலையில், ஐ.நா மன்றத்தில் இருநாட்டு தலைவர்கள் பேசப்போகும் கருத்துகள் குறித்து சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

ஹூஸ்டனில் மழைக்கு 2 பேர் பலி
அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி பங்கேற்கும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், 50,000 அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக, மெகா மேடை அமைக்கப்பட்டு, அனைத்தும் தயாராக உள்ளது. ஆனால் அங்கு கனமழை  பெய்து வருகிறது. ஹூஸ்டன் நகரில் சாலைகள் துண்டிக்கப்பட்டு நகர் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மழைபாதிப்பால் 2 பேர் பலியாகி உள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 13 மாவட்டங்களுக்கு அவசர நிலை  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Modi ,tour ,US ,UN , weekly tour. Prime Minister. Modi . UN
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...