மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக். 21ம் தேதி பேரவை தேர்தல்

* நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்கு  இடைத்தேர்தல் * அக். 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி ஒரே  கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று  அறிவித்தது. பதிவான ஓட்டுக்கள் அடுத்த மாதம் 24ம் தேதி எண்ணப்படுகின்றன.   இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர்  சட்டப்பேரவை தொகுதிக்கும் அக் 21ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம்  முறையே நவம்பர் 9ம் தேதியும், நவம்பர் 2ம் தேதியும் முடிகின்றன. இதனால்,  இந்த மாநிலங்களுக்கான  தேர்தல் தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையம் நேற்று   அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில்  அரோரா கூறியதாவது:

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு அடுத்த மாதம்  21ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். இதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 27ம் தேதி வெளியிடப்படும்.  அன்றைய தினமே  வேட்புமனு தாக்கல்  தொடங்கும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அடுத்த மாதம்  4ம் தேதி கடைசி நாள். மனுக்களை திரும்பப் பெற அடுத்த மாதம் 7ம் தேதி  கடைசிநாள். மகாராஷ்டிராவில் மொத்தம் 8.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  இவர்களில் 1.16 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். அரியானாவில் மொத்தம் 1.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.07 லட்சம் பேர் தபால்  மூலம்  வாக்களிக்க உள்ளனர்.

அரசியல் கட்சிகளின்  வேண்டுகோளின்படி, மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாக்குச்சாவடிகள், முதல் மற்றும் 2வது தளத்தில் இருந்து தரை தளத்துக்கு  மாற்றப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு  28 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் நக்சல்  பாதிப்புள்ள மாவட்டங்களான கட்சிரோலி, கோண்டியாவில் சிறப்பு பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை  விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். மகாராஷ்டிராவில்  தற்போது பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக தேவேந்திர  பட்நவிஸ்  உள்ளார்.  இம்மாநிலத்தில் மொத்தம் 288  சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில், இங்கு பா.ஜ 122 இடங்களில்  வென்றது. சிவசேனா 63  இடங்களில் வென்றது. இங்கு சிவசேனா மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ ஆட்சி அமைத்தது. அரியானா  மாநில முதல்வராக பாஜ கட்சியைச் சேர்ந்த  மனோகர் லால் கட்டார்  உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாஜ கடந்த முறை 47 இடங்களில் வென்று,காங்கிரசிடம் இருந்து  ஆட்சியை கைப்பற்றியது. தற்போது,  மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ  கடுமையாகப் போராடி வருகிறது. நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் இங்குள்ள  10 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது  குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் 15 தொகுதிக்கு தேர்தல்: கர்நாடக  மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீது அதிருப்தி கொண்ட 3 மஜத  எம்எல்ஏக்கள் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.  இதனால் குமாரசாமி  அரசு கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீது  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி  நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து 17  எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள  மனு மீது உச்ச நீதிமன்றம் 23ம் தேதி  விசாரணை நடத்த இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும்  காலியாக உள்ள பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி பதவி  பறிபோன எம்எல்ஏ.க்களின் 15 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 2 பேரின் வழக்குகள் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு  ஏற்கப்பட்டுள்ளதால், அவர்களின் தொகுதியில் மட்டும் தேர்தல்   அறிவிக்கப்படவில்லை.

மஜத தனித்து போட்டி

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மஜத.வின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான  தேவகவுடா அளித்த  பேட்டியில், ‘‘இடைத்தேர்தல் பற்றி மஜத தொண்டர்களிடம்  ஆலோசனை நடத்தி  வருகிறோம். இத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்பதே   தொண்டர்களின் விருப்பமாகும். எனவே, இடைத்தேர்தலில் தனித்தே போட்டியிட  முடிவு  செய்துள்ளோம்,’’ என்றார்.

64 தொகுதிகளில் இடைத்தேர்தல்

அடுத்த மாதம் 21 ம் தேதி 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடக்கிறது. அருணாச்சல பிரதேசம் (1),  அசாம் (4), பீகார் (5), சட்டீஸ்கர் (1), குஜராத்  (4), இமாச்சல பிரதேசம்  (2), கர்நாடகா (15), கேரளா (5),  மத்தியப் பிரதேசம்  (1), மேகாலயா (1),  ஒடிசா (1), புதுச்சேரி (1), பஞ்சாப் (4), ராஜஸ்தான் (2),  சிக்கிம் (3),  தமிழ்நாடு (2), தெலங்கானா (1), உத்தரபிரதேசம் (11) என, 64  தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி,  நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர்  தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

Related Stories: