மும்பை நிறுவனம் வாங்கிய ரூ.3,635.25 கோடி கடனை வசூலிக்க 14 வங்கிகள் கூட்டு முயற்சி: சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக நோட்டீஸ்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வாங்கிய ₹3,635.25 கோடி கடனை வசூல் செய்ய 14 வங்கிகள் கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளன. மும்பை புறநகரில் உள்ள நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று  வங்கிகள் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. புரொஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனம் உலோகம், கனிமம், பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள், ஜவுளி, வேளாண் பொருட்கள், உபகரணங்கள் போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு 25 நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம் 14 வங்கிகளில் மொத்தம் ₹3,635.25 கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் இதுவரை இந்த கடனை திருப்பி செலுத்த வில்லை. இது பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகியோர் செய்த மோசடிக்கு இணையானது என்று வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.புரொஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், பாங்க் ஆப் இந்தியாவில் ₹606.17 கோடி, பரோடா வங்கியில் ₹526.05 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. குறைந்தபட்சமாக ஆந்திரா வங்கியில் ₹47.85 கோடி கடன் வாங்கியுள்ளது. இதர வங்கிகளில் ₹100 கோடி முதல் ₹390 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை.

பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, இந்தியன் யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, விஜயா வங்கி, அலாகாபாத் வங்கி, இந்தியன் யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது.கடனை வசூல் செய்வதற்காக 14 வங்கிகளும் புரொஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதில் 60 நாட்களுக்குள் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், மும்பை புறநகரில் உள்ள அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.மும்பை அந்தேரி கிழக்கில் மிடோஸ் வர்த்தக வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய 4 அலுவலகங்கள், அந்தேரி மேற்கில், சுனில் வர்மா என்பவருக்கு சொந்தமான, கிரிஸ்டல் பிளாசாவில் உள்ள இரு அலுவலகங்கள்உள்ளிட்ட சொத்துகள் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Stories: