×

அளவெடுத்து 8 மாசமாகியும் கண்ணுல காட்டாத ‘டீ-சர்ட்’

மாங்கனி சிட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரை ஒருங்கிணைத்து உயரதிகாரி நடத்தும் ஏ.ஆர். கிளப் இருக்குது. இதில் உறுப்பினர்களாக 400க்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. இவங்க சம்பளத்தில் மாதம் தோறும் ₹80 பிடித்தம் செய்யப்படுது. வருஷத்திற்கு ஒருநாள் நடக்கும் கவாத்து பயிற்சியின் போது, இந்த அமவுண்டில் அனைவருக்கும் ஜோராக படாகானா விருந்து ெகாடுப்பாங்க. அதுமட்டுமல்லாமல் பண்டபாத்திரம், டீசர்ட் எல்லாம் கூட குடுப்பாங்க. இந்த வருஷத்திற்கான படாகானா விருந்து பிப்ரவரி மாசத்துலேயே கொடுத்தாங்க. ஆனால் டீசர்ட் கொடுக்கல. அளவெல்லாம் தனித்தனியா எடுத்தாங்க. ஆனா எட்டு மாசமாகியும் டீசர்ட்டை கண்ணுல கூட பார்க்க முடியல. கூட்டிப்பாத்தீங்கன்னா வசூல் செய்த அமவுண்ட் ரொம்ப பெருசு தான். ஆனால், படாகானா விருந்துக்கு செஞ்ச செலவு சிறிசு தான். கருத்தோட வசூல் செய்த அய்யா, பொறுப்போட டீசர்ட்டையும் குடுத்து எங்களை சந்தேகப்பட வைக்கமாட்டாருன்னு தான் தோணுது என்று  இழுக்கிறாங்க...ஏ.ஆர்.கிளப் மெம்பர்கள்.

லேசா தொட்டேன், பத்து லட்சம் அவுட்...!
ஈரோட்டில் கருங்கல்லால் கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், கிரைம் பிரிவில் தமிழ்கடவுள் பெயர் கொண்ட ஏட்டு ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், பெண் போலீஸ் மற்றும் புகார் மனு கொடுக்க வரும் பெண்களை விடுவதில்லை. படு பயங்கரமான ஜொள்ளு பார்ட்டி. சமீபத்தில் இக்காவல்நிலைய எல்லைக்குள் ஒரு கொலை நடந்தது. இந்த கொலை வழக்கில், ஈரோடு பைனான்ஸ் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது இந்த ஏட்டய்யா கவனத்துக்கு வந்தது. உடனே அவர், சப்தம் இல்லாமல் பைனான்ஸ் அதிபரிடம் நேரடியாக டீல் பேச ஆரம்பித்து விட்டார். பத்து லட்சம் ரூபாய் சம்திங் வாங்கிக்கொண்டு, இந்த விவகாரம் மேலதிகாரிகள் கவனத்துக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டார். டீல் பேசுவதற்காக பைனான்ஸ் அதிபர் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்றபோது, அங்குள்ள ஒரு பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் ஊழியர், ஏட்டுவின் லீலைகளை மறைமுகமாக வீடியோ எடுத்து, காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார். தற்போது, உயரதிகாரிகளின் பிடியில் ஏட்டு வகையாக சிக்கியுள்ளார். இவர் வாங்கிய பத்து லட்சம் ரூபாயை அமுக்க, மேலிடத்தில் ரகசிய பேரம் நடந்துவருகிறது. பெண் ஊழியரை லேசா தொட்டதற்கு இப்படியா...? என ஏட்டு கதறுகிறார்.

வெடிக்கப்போகுது டிரான்ஸ்பர் பட்டாசு
கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட காவல்துறையில் 50க்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் உள்ளன. இங்கு, பணிபுரியும் ஆய்வாளர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தால், செல்வதில்லை. அப்படியே போனாலும், அதே வேகத்தில் ரிவர்ஸ் கியர் போட்டு மீண்டும் கோவை மாவட்டத்துக்கே வந்துவிடுகின்றனர். கல்லாப்பெட்டி காலியாகுவதை எப்படி ஒத்துக்க முடியும் என்கிறார்கள் இவர்கள். கோவை மாவட்ட காவல்துறையில் நீண்ட காலமாக பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் அதிகாரிகள் யார், யார் என்ற பட்டியலை உளவுத்துறையினர் சேகரித்து வருகின்றனர். விரைவில், டமார்... டுமீல்... என டிரான்ஸ்பர் பட்டாசு வெடிக்கும் என்கிறார்கள் மேல்மட்ட அதிகாரிகள்.

தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக செல்போன் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. பேசிக் கொண்டிருக்கும்போதே பைக்கில் வந்து செல்போனை தட்டிப் பறித்துச் செல்லும் வழிப்பறி திருடர்கள் இம்மாவட்டத்தில் அதிகரித்துள்ளனர். இது சம்பந்தமாக குற்றம் நடந்த பகுதியின் காவல் நிலையத்திற்குச் சென்றால், எந்த போலீசுமே செல்போன் திருட்டில் வழக்கு பதிய மறுக்கின்றனர். இது செல்போன் திருட்டுக் கும்பலுக்கு செம குஷியைக் கொடுத்திருக்கிறது. பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடர்களிடம் ‘தொலைத்து விட்டு’, தாங்கள் பறிகொடுத்த செல்போனுக்கு குறைந்தபட்சம் ஒரு வழக்கு பதியக் கூட வகையின்றி பொதுமக்கள் புலம்பி, பரிதவித்து வருகின்றனர். ‘கண்டுபிடிக்கா விட்டாலும் பரவாயில்லை.. ஒரு எப்ஐஆர் போட்டுத் தாங்க சார்.. எடுத்துட்டுப்போனவன் என் போன்ல இருந்து சட்டவிரோதமாக ஏதாவது பேசி, ஏடாகூடமா அதுல நான் மாட்டிடலாம்.. ப்ளீஸ்...’’ இப்படி குரல்கள் மாவட்டத்தின் அத்தனை காவல் நிலையங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது. காவலர்கள்தான் இதை கண்டுகொள்வதில்லை.

மகிழ்ச்சியில் மாபியா கோஷ்டி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சப்-டிவிஷனில் உள்ள காங்கயம், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய பகுதிகள் ஈரோடு, மற்றும் கரூர் மாவட்ட எல்லைப்பகுதியை ஒட்டியே உள்ளது. இப்பகுதியில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என சட்டவிரோத செயல்கள் ஜரூராக நடக்கிறது. காவல்துறை அதிகாரிகள் இடையே லஞ்சமும், மாமூலும் கொட்டுகிறது. போலீஸ் துணையுடன் மணல் மாபியாக்கள் போடும் ஆட்டத்துக்கு அளவே இல்லை. தாராபுரம் அமராவதி ஆற்றில், ஆளும்கட்சி முக்கிய புள்ளிகளுடன் மணல் மாபியாக்களின் மணல் கொள்ளை, சக்கைப்போடு போடுகிறது. இதை, கண்டுகொள்ளாமல் இருக்க, காவல்துறைக்கு மாதம்தோறும் மாமூல் வெட்டப்படுகிறது. இதற்காக, ஒரு தனி டீம் செயல்படுகிறது. இந்த டீம், மாதம்தோறும் பட்டியல் போட்டு, அந்தந்த காவல் அதிகாரிகளிடம் வசூல் ஒப்படைத்து விடுகிறது. இதை தடுக்க, ஒரு பெண் எஸ்.பி., சமீபத்தில் களம் இறங்கினார். ஆனால், அவர், அடுத்த சில தினங்களில், அதிரடியாக வடக்கு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். இதனால், போலீசாரும், மாபியா கோஷ்டியினரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

மணல் கொள்ளையர்களிடம் பணம் வசூலிக்கும் இன்ஸ்பெக்டர்
வேலூர் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு காக்கிகளின் பின்னணியும் ஒரு காரணம் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. இதில் சத்துவாச்சாரியில் இப்போது பொறுப்பில் உள்ள பெண் காக்கி அதிகாரி, மணல் கொள்ளையர்களுக்கு வலதுகரமாகவே விளங்கி வருகிறாராம். இதனால் அவருக்கு தினமும் பாக்கெட்டுகள் நிரம்பி விடுகிறதாம். இவரது இந்த மணல் ஆட்டத்துக்கு தனி பிரிவில் உள்ள காக்கி அதிகாரியும், உள்ளூர் அரசியல்வாதிகளும் உடந்தையாம். அதேபோல் காட்டன் சூதாட்டம், ஒரு நம்பர் லாட்டரி, பாக்கெட் சாராயம் எல்லாமும் அந்த எல்லைக்குள் தாராளமாக கிடைக்கிறதாம். ஏற்கனவே அந்த ஸ்டேஷனில் இருந்த பழைய பெருச்சாளிகளும் பணியிட மாற்றம், ஓய்வு பெறுதல் ஆகியவற்றால் போலீஸ் பற்றாக்குறை இருப்பதால், இது அந்த பெண் காக்கி அதிகாரிக்கு சாதகமாக உள்ளது. இதனால் இவரது காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறதாம். இவரது இந்த ஆட்டத்தை பார்த்து இவரது சக உள்ளூர் காக்கி அதிகாரிகளின் காதில் புகை வருகிறதாம்.



Tags : T-shirt, 8 months , no,eyes
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்