×

புற்றீசலாய் பெருகி வரும் வாட்டர் கேன் கம்பெனிகளால் பெரியாற்றில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கபளீகரம்

* பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகும் அபாயம்
* நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக விவசாயிகள் புகார்

கம்பம்: தேனி மாவட்டம் முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே கம்பம் பள்ளத்தாக்கில், லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை மொத்தம் 14,700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. முப்போகம் விளைந்த இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒருபோகத்திற்கே வழியில்லாத நிலை உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 870 மினரல் வாட்டர் கம்பெனிகள் இருப்பதாக அரசு கூறினாலும், அரசு அனுமதியில்லாமல் ஆயிரக்கணக்கான கேன் வாட்டர் கம்பெனிகள் முறைகேடாக இயங்கி வருகின்றன. தேனி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் 11 மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் மட்டுமே 15 கம்பெனிகள் செயல்படுகின்றன.தண்ணியில்லா காடாகும் தேனி?: கேன் வாட்டர் கம்பெனிகள் பெருகுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மழை பொய்த்ததால் பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக ஆற்றங்கரையோரங்களில் இருக்கும் கேன் வாட்டர் கம்பெனிகள், தண்ணீரை உறிஞ்சி ஒரு கேன் ₹10 முதல் ₹30 வரை விற்கின்றனர்.

முல்லைப்பெரியாறு கரையோரமாக பெயரளவில் 2 சென்ட் இடத்தை வாங்கிப்போட்டு, அதில் போர்வெல் அமைத்து சுற்றி கட்டிடம் எழுப்பி நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தேனி மாவட்டம் வெகு விரைவில் ராமநாதபுரம் மாவட்டம் போல மாறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தயாரிப்பது எப்படி?: ஒரு கேன் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறை, அதனை சுத்திகரிக்க, ஆராய ஒரு பரிசோதனைக்கூடம், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறை தேவைப்படும். ஆர்ஓ யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்க டேங்க் மற்றும் சில உபகரணங்கள் தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் தூய்மையை பரிசோதிக்கும் ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ்கோப் போன்றவைகளுடன், இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் 8 பேர் முதல் 20 பேர் வரை தேவை.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேபில் பிஎஸ்சி மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேபில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை. மற்ற தொழிலில் மூலப்பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாது 10 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால், 4 லிட்டர் மட்டுமே இறுதியாக சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கிறது. இதனால் தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது.
காற்றில் பறக்கும் விதிகள் : சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தண்ணீர்  நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் தேவை. கையில் உறை, வாய், மூக்கை மூடிய நிலையில் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். வாட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும்போது சோப் ஆயில், குளோரின், கொதிநீரால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் மேலேயுள்ள எந்த விதிமுறைகளும் பின்பற்றுபடுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தரச்சான்றும் இல்லை...: ஐஎஸ்ஐ தரச்சான்று பெற வருடம் ₹97,000 முதல் ₹2 லட்சம் வரை கம்பெனிகளை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு அஞ்சியே பெரும்பாலான கம்பெனிகள் ஐஎஸ்ஐ தரச்சான்றை புதுப்பிப்பதில்லை. ஒரு சிலர் வீடுகளில் ஆர்ஓ பிளான்ட் அமைத்து, அதில் வரும் நீரை பிடித்து வியாபாரம் செய்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினாலும்  சீல் வைப்பதும், ஓரிரு நாளில்  திரும்ப திறப்பதுமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மத்திய நிலத்தடிநீர் பிரிவு அதிகாரி, பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு அதிகாரி, பெரியாறு - வைகை பாசன பிரிவு செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதி பெற்றே, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள், குழுவிடம் அனுமதி பெறுவது இல்லை என தெரிகிறது. இதுகுறித்து கம்பம் விவசாயி பொன்.காட்சிகண்ணன் கூறுகையில், ‘‘தூய்மையான முல்லை பெரியாற்று நீரை பருகாமல், தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் கேன் வாட்டர் பிடியில் சிக்கி, பென்னிக்குக்கின்  கனவை சிதைக்கின்றனர். பெரியாறு தண்ணீரை நன்கு காய்ச்சி பருகினாலே போதும். உடலுக்கு எந்த பிரச்னையும் வராது. இதற்கான அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட வேண்டும். 50 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை ஊக்குவித்து இன்று பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமல் திணறுவது போல, தற்போது தண்ணீர் பிரச்னை இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக  தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மிரட்டும் நியூட்ரினோ:  5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாஸ் கூறுகையில், ‘‘அம்மா குடிநீர் திட்டத்திற்காக லோயர்கேம்பில் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் அத்திட்டம்  நடைமுறைக்கு வந்தால், விவசாயம் மட்டுமல்ல. குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்படும். எனவே, விவசாய பூமியான  கம்பம் பள்ளத்தாக்கை  தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுமையம்  அமைய உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் 2 லட்சம் கொள்ளளவு  கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க  தொட்டிக்கு தண்ணீர் உப்புக்கோட்டையிலிருந்து கொண்டு செல்லப்படும். இத்திட்டத்திற்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது. இதனாலும், பெரியாறு அணை பாசனம் பெரிதும் பாதிக்கும்’’ என்றார்.

கண்காணிப்பு இல்லை
வாட்டர் கேன் நிறுவனங்கள்  நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீரை உறிஞ்சுகின்றன. இந்த அளவை கண்காணிக்க ஒரு லட்சம் லிட்டர் வரை எஸ்டிஓக்கள், 2 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க இஇக்கள், 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க எஸ்சிக்களிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், இவற்றை முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் இஷ்டம் போல தண்ணீர் சுருட்டப்படுகிறது.

வீட்டுமனையாகும் விவசாய நிலங்கள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம் பைபாஸ் முதல் தேனி வரை, பல இடங்களில் வயல்களை அழித்து பல்வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காரணம், விவசாயத்திற்கான நீர் போதுமானதாக இல்லை. பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 700  கன அடி தண்ணீர் திறந்து விட்டால், வைகை அணைக்கு  வெறும் 300 கன அடி மட்டுமே வந்து சேர்கிறது. மீதமுள்ள 400 கன அடி தண்ணீர் மின்மோட்டார்கள் மற்றும் வாட்டர் நிறுவனங்களால் உறிஞ்சப்படுகிறது.

அது இருந்தால் இது இல்லை
ஒரு கேன் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க வேண்டுமென்றால் முதலில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதை வைத்து பொதுப்பணித்துறையினரிடம் விண்ணப்பித்த பின்னரே, ஐஎஸ்ஐ தரச்சான்று பெற வேண்டும். அதன் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான கம்பெனிகளில் ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்ற நிலைதான் உள்ளது. ஐஎஸ்ஐ தரச்சான்று இருந்தால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரச்சான்று இல்லாமலிருக்கும். பொதுப்பணித்துறை சான்று இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை சான்று இல்லாமல் இருக்கும். இது அரசை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல... உடல்நலனோடு விளையாடும் விபரீத விளையாட்டு என  சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விதிமீறல் உண்மைதான்
கேன் வாட்டர் கம்பெனி உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘தேனி  மாவட்டத்தில் பல கேன் வாட்டர் கம்பெனிகள் முறையாக  அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவது உண்மைதான். வீடுகளில் ஆர்ஓ பிளான்ட் அமைத்து அதன்மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம். எங்கள் சங்கம் சார்பாக பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்’’ என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆறு, குளம், ஏரி போன்ற நீராதாரங்களை விட்டு 200 மீட்டர் தூரம் தள்ளித்தான் ஆரம்பிக்க வேண்டும்’’ என்றனர்.

புதிய அனுமதி இல்லை
நீதிமன்ற உத்தரவுப்படி 2013ம் ஆண்டுக்கு பிறகு, புதிதாக கேன் வாட்டர் தொழில் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை அதற்கு முன்பு லைசென்ஸ் உள்ளவர்கள், பழைய லைசென்சை புதுப்பித்து தற்போது வரை நடத்திக் கொள்ளலாம்.

Tags : water cane companies ,Millions , Millions,liters , growing number , water cane , companies.
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்