தலைமையின் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுப்பு தமிழக காங்கிரசில் செயல்படாத நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க முடிவு: கே.எஸ்.அழகிரியின் அதிரடி திட்டத்தால் பரபரப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஒத்துழைக்க மறுத்து வருவதால் புதிய நிர்வாகிகளை விரைவில் நியமிக்க கட்சி தலைமையிடம் கே.எஸ்.அழகிரி காய் நகர்த்தி வருவது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட நிலையில், நிர்வாகிகள் யாரும் மாற்றப்படவில்லை. திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே தற்போது வரை பதவியில் உள்ளனர். இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் முன்னின்று நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.

 இதனால் பல இடங்களில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் சொதப்பலில் முடிந்தது. கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அம்மாநில காங்கிரசார் கடுமையான போராட்டங்களை நடத்தினர். ஆனால் தமிழகத்தில் ப.சிதம்பரம் கைதுக்கு அதுபோன்ற எதிர்ப்புகள் இல்லை. இந்த விவகாரம் கே.எஸ்.அழகிரிக்கும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் நிர்வாகிகளை மாற்றிவிட்டு தனது ஆதரவாளர்கள் பலரை பதவிக்கு கொண்டு வர கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக ஏற்கனவே ராகுல்காந்தி தலைவராக இருந்த போதே பட்டியலை தயார் செய்து மேலிடத்தில் ஒப்படைத்திருந்தார். ஆனால் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த முயற்சி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

 தற்போது சோனியா காந்தி தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏற்கனவே கொடுத்த பட்டியலை மாற்றிவிட்டு தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய பட்டியலை தயார் செய்யும் பணியில் கே.எஸ்.அழகிரி தரப்பு அதிரடியாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்தால் கோஷ்டி பூசல் வெடிக்கும் என கருதப்படுகிறது.  எனவே தற்போதைய நிர்வாகிகளின் கட்சி பணிகளை கணக்கெடுத்து சரியாக வேலை செய்யாதவர்களின் பதவிகளை மட்டும் பறிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகிகளிடம் அவர்களின் கட்சி பணிகளில் உள்ள தொய்வுகளை சுட்டி காட்டி சமாதானப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக கே.எஸ்.அழகிரி டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இவரது அதிரடி முடிவுக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழக காங்கிரசில் விரைவில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: