×

முதன்முறையாக நியமனம் திருச்செந்தூர், பழனி கோயில்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள்

நெல்லை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக திருச்செந்தூர், பழனி கோயில்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் நிர்வாக அதிகாரிகள் வருமானத்தின் அடிப்படையில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்திலும், அதற்கு கீழ் உள்ள நிலையிலும் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டித் தரும் திருக்கோயில்கள் முதுநிலை திருக்கோயில்கள் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், திருத்தணி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோயில், வடபழனி முருகன் கோயில் ஆகிய கோயில்கள் முதுநிலை திருக்கோயில்கள் பட்டியலில் உள்ளன.

இந்தக் கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் இணை ஆணையர்கள் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பெரிய கோயில்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், திருப்பணிகள் உரிய காலத்தில் முறையாக நடக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் மண்டபம் கட்டித் தர உபயதாரர்கள பலர் தாமாக முன்வந்தும் எந்த பூர்வாங்கப் பணிகளும் இதுவரை நடக்கவில்லை. இதனால் பக்தர்கள் வெயிலில் சூடு தாங்காமல் ஓடி, ஓடி சாமி
தரிசனம் செய்து வந்தனர்.

தற்போது தான் தற்காலிக செட் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற பணிகள் உரிய காலத்தில் நடக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என பக்தர்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தனர். இதன் மூலம் சுவாமி தரிசனத்தில் நடக்கும் முறைகேடுகளையும் தடுக்க முடியும் என பக்தர்கள் நம்பினர். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் திருச்செந்தூர்,பழனி கோயில்களுக்கு நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இதன்படி திருச்செந்தூர் கோயில் நிர்வாக அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பி. அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் கலெக்டராக பணியாற்றிய இவர் திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார். இதே போல தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை துணைச் செயலாளர் டாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணை ஆணையர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகளும் பொறுப்பேற்
பார்கள் எனத் தெரிகிறது. தமிழகத்தில் கோயில்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல பிற முதுநிலை கோயில்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : IAS officers ,Thiruchendur ,time ,Palani ,temples , Thiruchendur, Palani
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...