மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனாவுடன் இணைந்து சந்திப்போம்; எந்தச் சந்தேகமும் இல்லை...மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் பேட்டி

மும்பை: சிவசேனாவுடன் இணைந்து மஹாராஷ்டிராவில் வெற்றி பெறுவோம் என மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர்  21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ்,  ‘நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை சிவசேனாவுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்.  தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களிடம் அறிவிப்போம்’ என்று தெரிவித்தார்.

தங்களுடைய ஆட்சி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான விமர்சனம் குறித்து பேசிய பட்னவிஸ், ’நான் சாம்னா பத்திரிக்கையை வாசிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சரவையின் சார்பில்  எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளும் சிவசேனா அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான்’ என்று விளக்கமளித்தார். அடுத்த முறையும் நீங்கள் முதல்வராக பதவியேற்பீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு,  அதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று பதிலளித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலில் 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியது. ஆனால் சரிசமமான தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டிய  பாஜக 106 தொகுதிகளை மட்டுமே சிவசேனாவுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறைந்த பட்சம் 120 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார்.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வகிக்கவும் சிவசேனா கோரியதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ‘சிவசேனாவும், பா.ஜ.க தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன. அதில், பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக 122 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது பெற்றது. முடிவில் சிவசேனாவுடன் இணைந்து பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: