கோதாவரி-காவிரி திட்டத்தை விரைவுபடுத்த கோரி தெலங்கானா கவர்னர் தமிழிசையுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

ஐதராபாத்: கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தும்படி வலியுறுத்தி தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசையுடன் தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர். தமிழகத்தில் நிலவும் தண்ணீரை தட்டுப்பாட்டை நீக்க கோதாவரி-காவிரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் கர்நாடகம், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் பயனடையும். இந்த இணைப்பு நடந்து விட்டால் காவிரி டெல்டாவில் தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், கோதாவரி நீர்ப்பாசன திட்டங்களை பார்வையிட தமிழகம், கர்நாடகம், கேரளம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 விவசாயிகளை தெலங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை அந்த மாநிலத்துக்கு அழைத்து உள்ளது. தமிழகத்தின் சார்பில் தமாகா விவசாய அணி தலைவர் திருச்சி புலியூர் நாகராஜன் மற்றும் மதுரை குருசாமி, திருவாரூர் சத்யநாராயணன், ஈரோடு நல்லசாமி உள்பட 30 பேர் சென்று உள்ளனர். இவர்களுடன் 3 பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்று உள்ளனர்.

நேற்று இவர்கள் தெலங்கானா மாநிலத்தில் கோதாவரி பாசன பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து இன்றும், நாளையும் அவர்கள் கோதாவரி பாசன திட்டப்பகுதிகளை பார்வையிடுகிறார்கள். தெலங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை சேர்மன் பிரகாஷ் ராவ் மற்றும் அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளையும் அழைத்து சென்று ஒவ்வொரு பகுதிகளையும் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை தமிழக விவசாயிகள் புலியூர் நாகராஜன், ஈரோடு நல்லசாமி, மதுரை குருசாமி உள்ளிட்டோர், தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை சந்தித்து 15 நிமிடம் பேசினர். அப்போது கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு ஆவன செய்வதாக கவர்னர் உறுதி அளித்ததாக விவசாயிக்அள் தெரிவித்தனர். நாளை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவையும் தமிழக விவசாயிகள் சந்திக்கிறார்கள். 24ம் தேதி சென்னை திரும்பும் தமிழக விவசாயிகள் தமிழக முதல்வரையும் சந்திக்க அனுமதி கேட்டு உள்ளனர்.

Related Stories: