×

குடிநீர் பிரச்னையை கண்டித்து குடிநீர் தொட்டியை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் போராட்டம்

மரக்காணம்: மரக்காணம் அருகே குடிநீர் பிரச்னையை கண்டித்து குடிநீர் தொட்டியை கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழ்பேட்டை ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர் உவர்நீராக மாறிவிட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு கடற்கரையோரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நீர்தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்துவிட்டது. இதனால் அந்த தொட்டியில் முழு கொள்ளளவு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பாதியளவு தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியவில்லை. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சிதிலமடைந்த டேங்க்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தியும் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரியும் வரவில்லை. இதனால் அவர்களாகவே கலைந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் டேங்கை சரிசெய்து, போதிய அளவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்றனர். பொதுமக்கள் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Drinking water, villagers
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...