அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியின் இறங்கிய பிரதமர் மோடி: 2 மணி நேரத்திற்கு பிறகு சென்றார்

பிராங்க்: அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி செல்லும் வழியில், ஜெர்மனியின் பிராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி சென்றார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி, தனிவிமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில்  பிரதமர் மோடி சென்ற விமானம் சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது விமானத்திலிருந்து இறங்கிய பிரதமர் மோடியை, ஜெர்மன் நாட்டிற்கான இந்தியத் தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் ஆகியோர்  வரவேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு பிரதமர் மோடியின் விமானம், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.

இன்று (செப். 21) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைகிறார். நாளை (செப். 22) டெக்சாஸில் நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரை  ஆற்றுகிறார். சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க வரலாற்றில் வாஷிங்டன் ‘டிசி’யை தவிர்த்து இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி  ஹவுஸ்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 23ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபட உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் 2வது முறையாக மோடி - டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது. அதனை  தொடர்ந்து, இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பங்களாதேஷ், ஜமைக்கா நாடுகளின்  தலைவர்களும், ஐநா பொதுச்செயலாளரும் பங்கேற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய ஆளுமை ஒருவர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஐக்கிய நாடுகள்  அவை கட்டடத்தின் மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் சார்பில் சுமார் ரூ.7 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, மைக்ரோசாப்ட்  நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச சாதனையாளர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த  விருது வழங்கப்படுகிறது.

அதன்பின், 25ம் தேதி உலக தொழில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். அதில், 45 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 26ம் தேதி 20 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து, இந்தியா  உடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். அதன்பின், 27ம் தேதி ஐக்கிய நாட்டு சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இவ்வாறாக பிரதமர் மோடியின் 7 நாள் பயணம் முடிந்து, 27ம்  தேதி இந்தியா திரும்புகிறார்.

Related Stories: