ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் சர்ச்சை நீடிப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு கோயிலை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் திருவிழாவின் போது மூலவரான சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜப்பெருமான் எழுந்தருளுவது வழக்கம். இங்குதான் அதிகாலையில் நடராஜருக்கும், அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடக்கும். அப்படிப்பட்ட புனித தன்மையான ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ம் தேதி தொழிலதிபர் இல்ல திருமண விழா விமரிசையாக நடந்தது.

இதனை தொடர்ந்து ஆடம்பர திருமணம் நடத்த அனுமதித்த தீட்சிதர்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நடராஜர் கோயிலில் ஆகம விதிகள் மீறப்பட்டு வருவதால் கோயிலை அரசுடமையாக்க வேண்டும் எனற கோரிக்கை மீண்டும்  எழுந்துள்ளது. நடராஜர் கோயிலில் நடந்த அத்துமீறல்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மா.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்ததோடு கோயிலை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.திருமணம் நடத்த அனுமதி வழங்கியதுபோல், ஆயிரங்கால் மண்டபத்தில் தனது சஷ்டியப்தபூர்த்தி(60 வயது நிறைவு) நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று சிவனடியார் ராதாகிருஷ்ணன்(62) என்பவர், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நேற்று சிதம்பரம் நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவரும், ஆடிபெருக்கு அன்று வல்லம்படுகையில் நடக்கும் நடராஜர் தீர்த்தவாரி நிகழ்ச்சி கட்டளைதாரருமான சந்திரபாண்டியன் சமூக ஆர்வலர்களுடன் சென்று சிதம்பரம்  டிஎஸ்பி மற்றும் சிதம்பரம் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.அதில், நடராஜர் கோயிலை நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணத்துக்கு அனுமதியளித்த தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் கோயிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கோயிலை வைத்து ஆண்டுதோறும் பல லட்சம் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். இதுபோல், கோயிலை அரசு ஏற்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories: