அம்பத்தூர், பாலாஜிநகர் தொழிற்பேட்டையில் பள்ளத்தில் தள்ளாடும் வாகனங்கள்: ஆங்காங்கே தண்ணீர் தேக்கம்

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர்- திருமுல்லைவாயல் எல்லையில் பாலாஜி நகர் தொழிற்பேட்டை உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கம்பெனிகள் உள்ளன. பேப்ரிகேஷன்  தொழிற்சாலைகள், எந்திரங்கள் மற்றும் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள், மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக இங்குள்ள பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பெய்யும்மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி  நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.  கம்பெனிகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் பஞ்சராகி நடுரோட்டில் நின்றுவிடுகிறது.

மேலும் பல தெருக்களில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் தொழிற்பேட்டை  இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் விரோதிகள் தொழிற்பேட்டை பகுதிகளில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத  செயல்களில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள தெருக்களில் முறையாக வடிகால் வசதி இல்லாததால், கம்பெனியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘’பாலாஜி நகர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனியில் இருந்து ஆண்டுதோறும் பல லட்சம் மதிப்பில் வரி செலுத்தப்படுகிறது. ஆனால், இங்கு சாலை, மழைநீர் வடிகால், துப்புரவு பணி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை’ என்றார். எனவே, பாலாஜி நகர் தொழிற்பேட்டை பகுதியில் சாலை, வடிகால், குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’தொழிற்பேட்டை வளாகத்தில் வடிகால் வசதி இல்லை. சில இடங்களில் அமைக்கப்பட்ட கால்வாய்களும் முறையாக பராமரிப்பின்றி உள்ளது. தற்போது, பெய்து வரும் மழையால் கம்பெனிகளை  தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. சில கம்பெனிகளில் மழைநீர் புகுந்து மூலப்பொருட்களும் சேதம் அடைகிறது. தொடர்ந்து மழை பெய்தால் கம்பெனிக்கு ஆட்கள் வர முடியாது. எனவே, அடிப்படை வசதி செய்துகொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றனர்.

Related Stories: