காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4000 பேரில் 3100 பேர் விடுதலை: மாநில டி.ஜி.பி தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 4 ஆயிரம் பேரில் 3 ஆயிரத்து 100 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அம்மாநில காவல் துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன்   பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இருதினங்களுக்கு முன்புதான், பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால், அவர் வசிக்கும் வீடே சிறையாக மாற்றப்பட்டு, அவர் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல், மாநிலம் முழுவதும்  பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் மக்கள் கடைகள், சந்தைகளை திறக்கக் கூடாது என அச்சுறுத்திய 30 பேர் ஸ்ரீநகர், கந்தர்பால், சோப்போர் ஷோபியான், புல்வாமா உள்ளிட்ட இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையை  தூண்ட முயற்சிப்போர் உடனுக்குடன் கைது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் தற்போது வரை கைது செய்யப்பட்ட 4000 பேரில் 3100 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பொதுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் கைது  செய்யப்பட்டவர்கள் மட்டும் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறினார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வன்முறை இல்லாத நாள் என ஒருநாள் கூட பதிவாகாத நிலையில், வியாழக்கிழமை காஷ்மீரில் ஒரு  வன்முறை கூட பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kashmir ,State , 3100 people released out of 4000 arrested in Kashmir special status case: State DGP
× RELATED செங்கல்பட்டு பகுதியில்...