×

பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

பேரையூர் :  சேடபட்டி அருகே ஊருணிக்குள் பழமையான முனீஸ்வரர், நாகநாதர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேரையூர் தாலுகா சேடபட்டி பெருங்காமநல்லூர் கிராமத்திலுள்ள பெத்தனசாமிகோவில் ஊருணி குடிமராமத்து பணிக்காக தோண்டப்பட்டது. அப்போது 2 அடி உயரமுள்ள முனீஸ்வரர் சிலை, 3 அடி உயரமுள்ள நாகநாதர் சிலை கண்டெடுக்கப்பட்டது.  பெருங்காமநல்லூர் வி.ஏ.ஓ. கவாஸ்கர் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ.விற்கு தகவல் கொடுத்தார். அதன் பின்பு சிலைகள் இரண்டும் ஊருணி அருகிலுள்ள பெத்தனசாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக கோவில் நிர்வாகிகளில் ஒருவரான வழக்கறிஞர் ராஜசேகர் கூறும்போது, இந்த பெத்தனசாமி நாங்கள் பரபம்பரையாக வணங்கிவந்த குலதெய்வம். இந்த ஊருணியில் முனீஸ்வரர், நாகநாதருக்கு தேங்காய்பழம், அபிஷேகங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனால் இதுவரை சிலைகளை நாங்கள் பார்த்ததில்லை.

முன்னோர்கள்தான் பார்த்துள்ளனர். அத்திவரதரைப்போல் ஊர் நலனுக்காக சாமி சிலைகளை ஊருணிக்குள் முன்னோர்கள் வைத்துவிட்டு சிலநாட்கள் கழித்து எடுத்து வழிபடுவது மரபு. அதுபோன்று வைத்த சாமி சிலைகள்தான் ஊருணிக்குள் இருந்துள்ளது என்றார். சிலைகள் இரண்டும் எந்த காலத்தை சேர்ந்தவை என்பதை தொல்லியியல் நிபுணர்கள் ஆராய்ச்சியில்தான் கண்டுபிடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED 10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு