×

தா.பழூர் அருகே சாலை வசதியின்றி இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்

*பாலம் அமைத்துத்தர கோரிக்கை

தா.பழூர் : தா.பழூர் அருகே சாலை வசதியின்றி இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை மக்கள் சுமந்து சென்றனர். பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கோடாலி கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த வக்காரமாரி கிராம காலனி தெருவில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் முருகேசன் மனைவி மாரியம்மாள்(60) என்பவர் மரணம் அடைந்தார்.

இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் இரு வாய்க்கால்களை கடந்து சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு அருகேயுள்ள வயல்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. இந்த இடுகாட்டுக்கு செல்ல புதிய பொன்னாறு என்ற சிறிய ஆறும் மற்றும் புதிய பொன்னாறு என்ற பெரிய ஆறும் உள்ளது.கோடை காலங்களில் சுடுகாட்டிற்கு செல்வது என்பது பெரிய காரியமாக தெரியவில்லை சுலபமாக சென்று விடுகின்றனர்.

தற்பொழுது கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் வந்தது அதிக தண்ணீர் வந்ததால் மேலும் அரியலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்த காரணத்தினாலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாரியம்மாள் இறந்ததை அடுத்து அவரது உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. அந்த ஊரில் இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் சாலைகள் முற்றிலும் கருவேலமரங்கள் மண்டி கிடந்ததால் அவற்றை அகற்றி சாலையை சரி செய்து இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் அறையில் உள்ள இரண்டு ஆறுகளிலும் நீர் அதிகமாக சென்றதால் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மேலும் காலம் காலமாக இதுபோல் தண்ணீரில் இறங்கி சடலங்களை கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.சிலர் கால் இடறி தண்ணீரில் விழுந்ததும் உண்டு ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் யாராவது இறக்க நேர்ந்தால் அவர்களை மயான கொட்டகைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்து விட்டு மீண்டு வருவது மிகுந்த சிரமமாக உள்ளது . மேலும் சென்ற ஆண்டில் ஆற்றில் தண்ணீர் வந்தபோது ஒரு சடலத்தை கொண்டு சென்றபோது சடலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த சடலத்தை டயர் மட்டும் டீயூபுகள் கொண்டு தண்ணீரில் இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி அந்தப் பக்கத்தில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இருப்பதாகவும் இதில் உதயநத்தம், கோடாலிகருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இதில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை தலையில் சுமந்து ஆற்றுக்கு அந்தப்புரம் எடுத்துச்சென்று விவசாயம் செய்து வருகின்றனர்.அதில் விவசாயம் செய்து விளைவித்த பொருட்களை தண்ணீர் வரும் சமயத்தில் தலையில் சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதில் பாலம் அமைப்பதால் வருங்காலத்தில் சுடுகாட்டுக்கு சடலங்களை சுமந்து செல்வதில் இருக்கும் இன்னல்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளுக்கும் பெரிதும் பயன்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவையான இந்த பாலத்தையும் சுடுகாட்டிற்கு தேவையான சாலையையும் நிரந்தரத் தீர்வாக அமைக்க வேண்டும் என வக்காரமாரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thapoor ,Cemetry ,river ,Tha. , Cemetry,river,dead body, no way
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை