காளையார்கோவில் அருகில் மரக்காத்தூரில் கண்மாய் உடைந்ததால் தண்ணீரில் மிதக்கும் விளை நிலங்கள்

காளையார்கோவில் :காளையார்கோவில் அருகில் மரக்காத்தூரில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்தது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மரக்காத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சம் மதிப்பில் கடந்த இரண்டு மாதங்களாக குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

மூன்று கிலோ மீட்டர் சுற்றளவை கொண்ட இந்த கண்மாயில் இருந்து மரக்காத்தூர் மற்றும் செவந்தரேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர்பாசன வசதி அடைந்துவந்தார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல்போதிய மழை பெய்யாமல் கண்மாய் வறண்ட நிலையில் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. கடந்த ஒருவாரமாக லேசான மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மூன்று மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் அரைக்கண்மாய்க்கு மேல் தண்ணீர் நிரம்பியது.

இந்நிலையில் கண்மாயில் குடிமராமத்து பணியில் மதகுஅணையை உரிய முறையில் சீரமைக்கப்படாததால் நேற்று முன்தினம் இரவு மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறி விட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் முழுவதும் மண் அறித்து வரப்புகள் தெரியாத அளவிற்கு மூடிவிட்டன. மேலும் அந்தரேந்தல் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் போது அப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளுக்கு போன் செய்தபோது யாரும் போன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 70 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள் மந்தநிலை நடைபெற்று வருவதாகவும், முறையான உள்ளூர் விவசாயிகளை வைத்து இப்பணிகள் நடைபெறவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தற்போது மழைகாலம் தொடங்கிய நிலையில் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயி கார்த்திக் கூறுகையில், ‘‘அதிகாரி மற்றும் காண்ட்ராக்டர் அலட்சியத்தால் மதகு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது மழைகாலம் என்பதால் மதகு கட்டும் வேலைசெய்யும் பொழுது கண்மாய்க்குள் தடுப்பு அனை அமைத்து இருந்தால் இதுபோன்ற உடைப்பு ஏற்பட்டிருக்காது. ஐந்து வருடம் விளையவில்லை. இந்த வருடமாவது விளைந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தற்போது நம்பிக்கை இழந்து விட்டோம். ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கருக்கு இதுவரை இருபது ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். தற்போது விவசாயம் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். உடைப்பு ஏற்பட்ட மதகுவை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மெத்தனம் காட்டிய அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: