தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பாதுகாப்பற்ற முறையில்  கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் 3ம் மைல் முதல் திரேஸ்புரம் பகுதி வரை பக்கிள் ஓடை செல்கிறது. சுமார் 8 கிமீ தொலைவுள்ள இந்த வெள்ளநீர் கால்வாய் தற்போது முழுமையாக கழிவு நீரோடையாக மாறிவிட்டது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான வீடுகள், சிறுசிறு வணிக நிறுவனங்களின் கழிவுகளும் சேர்ந்து கடலில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. கழிவுநீர் அதிகமாக செல்வதால் அவ்வப்போது தூர்வாரப்படும் நிலை உள்ளது.

இதனை தூர்வார ஆங்காங்கே மிதக்கும் பில்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களால் மட்டுமே இந்த ஓடையை சுத்தம் செய்ய முடியும் என்பதால் பல பிரத்யேக இயந்திரங்கள் மாநகராட்சியில் வாங்கி பயன்பாட்டில் உள்ளன. மேலும் மனிதர்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கேவிகே நகர் பகுதியில் உள்ள பக்கிள்ஓடையில் 6க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பாக முழு காலணி அணிந்திருந்தாலும் அதை தாண்டிய ஆழத்திற்கு கழிவுகள் இருந்ததால் அவர்கள் கழிவுகளுக்குள் இறங்கி சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தங்கள் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் 4 பேர் ஓடையினுள் சுத்தம் செய்து, கழிவுகளை ஒவ்வொரு கூடையாக சேகரித்து கொடுக்க கரையில் நின்ற 2 தொழிலாளர்கள் வாங்கி வெளியேற்றினர். பாதுகாப்பற்ற நிலையில் ஓடைக்குள் இறங்கி கழிவுகளை அகற்றியது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கழிவுகளை அகற்றுவதற்கு வசதியாக துப்புரவு தொழிலாளர்களுக்கு கையுறை, காலுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றனர். ஆனால் சுமார் 15 அடி ஆழம் கொண்ட பக்கிள் சுமார் 3 அடிக்கும் மேல் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காலுறைகள் சுமார் ஒன்றரை அடி அளவிற்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: