விக்கரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்: திமுக தலைவர் அறிவிப்பு

சென்னை: நான்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவத்துள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செப் 23ம் தேதி தொடங்கி செப்.30ம் முடிவடையும். அக்டோபர் 1ம் தேதியன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறும். இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் அக்டோபர் 21ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழநாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரியுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது, விக்கரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல புதுவை காமராஜர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் எனக் கூறினார். இதனை தொடர்ந்து, விக்கரவாண்டியில் திமுக வேட்பாளர் யார் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தார். விக்கரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். வேட்பாளர் நேர்காணல் அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 24ம் தேதி விருப்பமனு விநியோகம் நடைபெறும் என கே.அழகிரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: