வட இந்திய நகரங்களுக்கு தினசரி ரயில் இன்றி தென்மாவட்ட பயணிகள் திண்டாட்டம்

*சென்னை ரயில்கள் நீட்டிப்பு செய்யப்படுமா?

நெல்லை : தென்மாவட்டங்களில் இருந்து வட இந்திய நகரங்களுக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் இருந்து வடஇந்தியாவிற்கு இயக்கப்படும் ரயில்களில் இரு ரயில்களையாவது தென்மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்டு வரும் நெடுந்தூர ரயில்கள் வாராந்திர ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டத்திலிருந்து ஒரு தினசரி ரயில் கூட வட இந்திய நகரங்களுக்கு இதுவரை இயக்கப்படவில்லை. தமிழக எல்லைக்குள் இயக்கப்படும் ரயில்களில் கன்னியாகுமரி - நிஜாமுதின் திருக்குறள் வாரம் இருமுறை ரயில் மற்றும் கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள் சுமார் 806 கிமீ தூரம் அதிகபட்சமாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களுக்கு தினசரி ரயில் அந்தஸ்து இன்று வரை கிடைக்கப்படவில்லை. தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்கள் முன்பெல்லாம் மீட்டர் கேஜ் பாதை என்பதால் எழும்பூரில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. அகல ரயில்பாதை மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. சென்னை - மதுரை இரட்டைப் பாதை பணிகள் ஓரளவு நிறைவு பெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன். மதுரை- கன்னியாகுமரி இருவழிபாதை பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையிலும் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது. எனவே தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையிலிருந்து இயக்கப்படும் சில நெடுந்தூர ரயில்களை தென்மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

சென்னையிலிருந்து வட இந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் என கூறப்பட்டாலும் தமிழக எல்கைக்குள் வெறும் 64 கிமீ தூரம் மட்டுமே பயணிக்கிறது. சென்னையில் இருந்து புறப்பட்டால் அடுத்த நிறுத்தமே ஆந்திராவில் அமைகிறது. ஆனால் கேரளாவில் இந்த நிலை இல்லை. திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாநிலத்தின் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுமாறு இயக்கப்படுகிறது.

ரயில்வேத்துறை தமிழகத்தின் ஓர் எல்லையில் உள்ள சென்னைக்கு மட்டும் ரயில்களை இயக்கிவிட்டு, தமிழகத்துக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவதாக கணக்கு காட்டுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பயணிகள் பயன்பெற முடிவதில்லை. தென்மாவட்டங்களில் இருந்து கேரளா வழியாக இயக்கப்படும் ரயில்களிலும் இத்தகைய நிலையே உள்ளது. நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து நெடுந்தூர ரயில்கள் புறப்பட்டவுடன் உடனடியாக கேரளா சென்றுவிட்டு பின்னர் கோவை வழியாக தமிழகம் வந்து பின்னர் வடஇந்திய நகரங்களுக்கு செல்கின்றன. இந்த ரயில்களும் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதில்லை. குறிப்பாக நெல்லை- பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு பயன்படும் வகையில் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தென்மாவட்ட பயணிகள் சங்கத்தை சேர்ந்த ராம் கூறுகையில், ‘‘சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ரயில்வே சென்னை ரயில்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. சென்னையில் இருந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வட இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. அவற்றில் ஏதாவது இரு தினசரி ரயில்களை நெல்லை அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யலாம். இரட்டை ரயில்பாதை பணிகளும் விறுவிறுப்பு பெற்று விட்ட சூழலில், புதிய ரயில்களை கூட தென்மாவட்டங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கிட முன்வரவேண்டும்’’ என்றனர்.

லக்கேஜ்களுடன் ஓட்டம்

தென்மாவட்டங்களில் உள்ள பயணிகள் வட இந்திய நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு ரயிலில் சென்னை எழும்பூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டும். பகல் முழுவதும் சென்னையில் பொழுதை கழித்துவிட்டு மாலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் ஏறி வட இந்தியா செல்கின்றனர். இதில் குடும்பத்துடன் லக்கேஜ் கொண்டு செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒரு ரயிலாவது தினசரி இயக்கப்படுமா?

கன்னியாகுமரி- புதுடெல்லி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை, கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயில், நாகர்கோவில் -மும்பை வாரம் 4 நாள் ரயில், நாகர்கோவில் - மும்பை வாரம் இருமுறை, நெல்லை- ஜம்முதாவி வாரம் இருமுறை, நெல்லை- தாதர் வாராந்திர ரயில், நெல்லை- தாதர் வாரம் மும்முறை ரயில், தூத்துக்குடி- ஓகா வாராந்திர ரயில் என இயக்கப்படும் ரயில்கள் அனைத்துமே தினசரி அந்தஸ்தை இன்னமும் பெற முடியாமல் திண்டாடுகிறது. எனவே தென்மாவட்டங்களை மையமாக கொண்டு வடஇந்திய நகரங்களுக்கு ஒரு தினசரி ரயில் அவசியமாகும்.

Related Stories: