×

சுடுகாட்டுக்கு இடமும் இல்லை, சாலை வசதியும் இல்லாத நிலையில் இடுப்பளவு வெள்ளத்தில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்

*அணைக்கட்டு அருகே அவலம்


வேலூர் : நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளை கடந்தும் உண்ண உணவு, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுடுகாடு, அதற்கான பாதை வசதி என எந்த அடிப்படை பிரச்னைகளுக்காக அல்லாடும் மக்களும் நாட்டில் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இது போன்ற பிரச்னைகள் குறித்து சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டாலும், அரசு இயந்திரங்கள் மிக மெதுவாகவே நடவடிக்கையை எடுக்கின்றன.

சமீபத்தில் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்தவரின் சடலத்தை வழக்கம்போல் விவசாய நிலம் வழியாக எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் நிலத்தின் உரிமையாளர் தடுத்து நிறுத்தியதால், வேறு வழியின்றி சாலையில் மேம்பாலத்தின் வழியாக கயிறு கட்டி சடலம் இறக்கப்பட்டு சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. அதேபோன்ற இன்னொரு சம்பவம் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது. அணைக்கட்டு அடுத்த சேர்பாடி ஊராட்சி மக்கள் இறந்தவர்களை அங்குள்ள ஆற்றை கடந்து மறுபுறம் உள்ள இடுகாட்டுக்கு எடுத்து சென்றுதான் அடக்கம் செய்வதோ அல்லது எரிக்கவோ செய்ய வேண்டும். ஆற்றில் லேசான வெள்ளம் வந்தாலும் இறந்தவர்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, தங்கள் கிராமத்தில் ஆற்றுப்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று சேர்பாடி கிராம மக்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல் தொகுதி எம்எல்ஏ நந்தகுமாரிடமும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து எம்எல்ஏ நந்தகுமார் சேர்பாடி கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஆற்றுப்பாலம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சேர்பாடியை ஒட்டி செல்லும் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடும் நிலையில் நேற்று கிராமத்தில் இறந்த மூதாட்டியின் சடலத்தை பாடையில் கட்டி எடுத்து வந்தவர்கள் கரைபுரண்டு  ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்துடன் நீந்தி சென்ற கொடூரம் நடந்தது. இடையில் வெள்ளம் அதிகரித்து நீரோட்டத்தில் மாற்றம் கண்டிருந்தால் சடலத்தை எடுத்து சென்றவர்களின் நிலை என்ன? என்பதுதான் கிராம மக்களின் கேள்வி. எனவே, இனியாவது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தாமதமின்றி சேர்பாடி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சேர்பாடி ஆற்று பாலம் கட்டித்தருவதுடன், சுடுகாட்டுக்கான பாதையையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இதுதொடர்பாக எம்எல்ஏ நந்தகுமார் கூறுகையில், ‘தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், பல கோரிக்கைகளை வைத்தும் எனது தொகுதியில் உள்ள சேர்பாடி ஊராட்சியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆற்றுப்பாலம் அமைக்காததால் இன்றும் அந்த ஊரில் இறந்தவரின் சடலத்தை தண்ணீரில் 1 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக கண்ணீரோடு சுமந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே, உடனடியாக அந்த ஊராட்சியில் ஆற்றுப்பாலம் அமைத்து அந்த மக்களின் துயர்துடைக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’ என்றார்.

Tags : floods ,Cemetery ,vellore ,water ,No Placefor Cemetery , vellore,Cemetery ,People , anaikattu
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...