×

பறவைகள் வரத்து குறைந்தது வறட்சியால் தண்ணீரின்றி வறண்டது கூந்தன்குளம்

*பார்வையில் தென்படும்  பட்ட மரங்கள்

நெல்லை :  நெல்லை அருகே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வறட்சி காரணமாக பறவைகள் வரத்து மிகவும் குறைய தொடங்கியுள்ளது. தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படுவதாக பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நெல்லையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூந்தன்குளம் கிராமம் 1994ஆம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. கூந்தன்குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. பின்டைல், பிளாக்விங்டு ஸ்டில், பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை இங்கு தங்கி கூடுகட்டி குஞ்சு பொரிக்கும். வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளுக்கு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சீசன் காலமாகும்.

இங்குள்ள குளம் மற்றும் ஊர்பகுதி மரங்களில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்த உள்நாட்டு பறவைகள், ஆடி அமாவாசையோடு சீசன் முடிந்து தங்கள் பகுதிகளுக்கு திரும்பும். இவ்வாண்டு நெல்லை மாவட்டத்தை பாதித்த வறட்சி கூந்தன்குளத்தையும் விட்டு வைக்கவில்லை. தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படுகிறது. குளங்களில் ஆங்காங்கே பட்ட மரங்கள் வறட்சியின் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. குளத்தில் மேலோட்டமாக காணப்படும் புற்களை மேய ஆடு, மாடுகளை அழைத்து செல்வோர் அதிகம் உள்ளனர். ஆடி அமாவாசையோடு தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பிவிட்ட பறவைகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. வெளிநாட்டு பறவைகள் மட்டுமின்றி, உள்நாட்டு பறவைகளும் குளத்தில் தென்படவில்லை.

இதுகுறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில், ‘’கூந்தன்குளத்தில் இவ்வாண்டு சீசனும் மந்தமாகவே இருந்தது. சீசன் காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலாக பறவைகள் வந்து கூடு கட்டுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு சீசன் காலத்தில் அடித்த சூறை காற்று ஆயிரக்கணக்கான பறவைகளின் உயிரோடு விளையாடியது. பல பறவைகள் குற்றுயிரும், குலை உயிருமாக மரங்களில் தொங்கின. அதை தொடர்ந்து மற்ற பறவைகளும் இங்கிருந்து கண்காணா தூரத்திற்கு சென்றுவிட்டன. தற்போதைய வறட்சியில் பறவைகளை காண்பதே அரிதாகிவிட்டது. சரணாலயம் என அறிவிக்கப்பட்ட கூந்தன்குளத்திற்கு தண்ணீரை கொண்டு வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

கூந்தன்குளத்தில் நிலவும் வறட்சி காரணமாக இவ்வாண்டு நெல்லை கால்வாய்க்கு பாத்தியப்பட்ட பாலாமடை, ராஜவல்லிபுரம், கட்டளை குளங்களில் காணப்படும் பறவைகளை கூட கூந்தன்குளத்தில் பார்க்க முடியவில்லை. எப்போதும் அங்கு குடியிருக்கும் பட்ட தலை வாத்துக்கள் கூட பறந்து விட்டன. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து கூந்தன்குளத்திற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் குளம் வறண்டு காணப்படுவதும், பறவைகள் இல்லாமல் இருப்பதும் சுற்றுலா வருவோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


Tags : drought ,Tirunelveli , Tirunelveli ,kunthankulam ,Birds, heavy drought, dried,
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?