திருச்சி சோமரசம்பேட்டை கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை

திருச்சி : சோமரசம் பேட்டை கோயிலில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறையில் 100 ஆண்டு பழமையான பார்வதீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இக்கோயிலில் இருந்த வெண்கலபிரதோஷ நாயகர் சிலை திருட்டு போனது. திருடு போன சிலையை போலீசார் மீட்டு தஞ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் வழக்கு முடிந்ததை தொடர்ந்து சிலை மீண்டும் கோயிலில் வழிபாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் திருட்டு போன சிலைகள் மீண்டும் நீதிமன்றம் மூலம் கோயில்களில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஜோஸ்தங்கய்யா, இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் நேற்று அல்லித்துறை பார்வதீஸ்வரர் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதில் சிலை சிதலமடைந்து இருப்பதால் பாதுகாப்பு கருதி சோமரசம்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பிரதோஷநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. விழாக்காலங்களில் மட்டும் சிலை இங்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு , முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று பிரதோஷ நாயகர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றனர்.

Related Stories: