முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்ததற்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை : முகலிவாக்கத்தில் யாரோ பள்ளம் தோண்டியதால் மின்சார கம்பி வெளியே வந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மின் வாரியம் பொறுப்பு ஆகாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முகலிவாக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பு என்று அவர் கூறினார். முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரை சேர்ந்தவர் செந்தில், இவர் ஷேர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மகன் தீனா (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். தனம் நகரில் உள்ள தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் மின்வாரிய அலுவலகம் சார்பில் சாலையில் மின்வயர்கள் பதிக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த பள்ளங்கள் சரிவர மூடாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில், மின்வயர்கள் அனைத்தும் வெளியில் தெரியும்படி கிடந்தன.

இந்நிலையில், அந்த வழியாக தீனா நடந்து சென்ற போது, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் வைத்தான். அதில், அதிக அழுத்தம் கொண்ட மின்கம்பி இருந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிந்தபமாக சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக, முகலிவாக்கம் பகுதி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக, மாநகராட்சிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, விபத்துக்கு மின்வாரியம் காரணமல்ல; நகராட்சி தான் காரணம் என தெரிவித்தார். அதேபோல, மாநகராட்சியோ, மின்சார வாரியமோ யார் காரணமாக இருந்தாலும் மின்சார விபத்து வருந்தத்தக்க விஷயம் என்று வருத்தம் தெரிவித்தார். சென்னை முகலிவாக்கம், சிட்லபாக்கம் மின் விபத்துகளை போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related Stories: