பாரத் இணைய சேவை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்க ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

புதுடெல்லி: பாரத் இணைய சேவை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 55,000 கி.மீ தொலைவுக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வசதியை 55,000 கி,மீ தொலைவுக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் கூடிய இணைய வசதி வழங்கப்படவுள்ளது.

பாரத் இணைய சேவை மற்றும் மாநில அரசின் தமிழ் இணைய சேவைக்கு 2,411 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே கேட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் டிஜிட்டல் தகவல் தொடர்புத்துறை பாரத் இணைய சேவை திட்டத்திற்கு 1,815 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் பூர்த்தியாகும்போது, தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கு தகவல் தொடர்பு சேவை கிடைக்கும் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு சார்ந்த சேவைகள், கல்வி, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு இந்த ஃபைபர் கேபிள் மூலம் பயன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26,000 அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு, இணைய சேவையை வழங்க இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: