நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டம்

தேனி: தேனி அரசு மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரனிடம் கண்டமனுர் விளக்கு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யா என்ற மாணவர் மீது, மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை. மேலும், அவரது வீட்டிலும் யாரும் இல்லை. இந்த நிலையில், உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, முன்ஜாமின் கோரி மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை எந்த நிலையிலும் ஏற்கவில்லை. தன் புகைப்படம் ஒன்று செல்போனிலும், மற்றொன்று ஸ்டூடியோவிலும் எடுக்கப்பட்டது. நீட் தேர்வில் முறையாக வெற்றி பெற்று கல்லூரியில் சேர்ந்ததாகவும், தன் மீது வீண்பழி போடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உதித்சூர்யா மீது போடப்பட்ட காணவழக்கு தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் உதித்சூர்யா-வின் தந்தை வெங்கடேசன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆள்மாறாட்டத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

Related Stories: