அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு ரீப் ஹெரான் பறவைகளை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்களில் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக வந்து, இங்குள்ள மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து திரும்புகிறது. தற்போது ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் சாம்பல் கருப்பு நிறம் கொண்ட ‘ரீப் ஹெரான்’ பறவைகள், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் அதிகளவில் வந்துள்ளன.

Advertising
Advertising

தமிழகத்தில் ‘கரைக்கொக்கு’ என்றழைக்கப்படும் இப்பறவைகள் மேற்கு ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியிலும் அதிகளவில் காணப்படுகிறது. அதிகபட்சமாக 66 செமீ நீளம் வரை வளரக்கூடிய இப்பறவைகளின் இறக்கைகள் 110 செமீ நீளம் வரை இருக்கும். கருமையான சாம்பல் நிறத்தில் காணப்படும் இப்பறவைகள் மஞ்சள் நிறக்கால்களையும், நீளமான அலகையும் கொண்டுள்ளது.

கடல் சார்ந்த மீன்கள், ஒட்டு மீன்களை உணவாக உட்கொள்ளும் இப்பறவைகள், நீர்நிலைகள் அருகில் உள்ள சதுப்பு நிலக்காடுகள், பழைய கட்டிட துவாரங்கள், மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்கின்றன. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அங்குமிங்கும் பறந்து திரியும் ‘ரீப் ஹெரான்’ பறவைகளை இங்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதுடன், மொபைலில் படம் எடுத்து செல்கின்றனர்.

Related Stories: