விவாசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்திரப்பிரதேச விவசாயிகள் டெல்லியில் மாபெரும் பேரணி

புதுடெல்லி : உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் கேட்டு விவசாயிகள் டெல்லிக்கு பேரணிச் சென்றனர். பாரத் கிசான் யூனியன் (BKU) அமைப்பை சேர்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த பேரணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக உத்தரபிரதேசம் - டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள் கடந்த செப்டம்பர் 17ம் தேதி மேற்கு உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து பேரணியை தொடங்கினர்.

அங்கிருந்து நேற்றைய தினம் நொய்டா வந்தடைந்தனர். அப்போது, வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் பிரதிநிதிகளை சந்தித்தனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு பேரணி நடத்தும் திட்டத்தை கையெடுத்தனர். அதன்படி, நொய்டாவில் இருந்து விவசாயிகள் தங்களது பேரணி தொடங்கினர். இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் தலைநகர் டெல்லியை வந்தடைந்தனர். BKU அமைப்பை சேர்ந்த உத்தரபிரதேச விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

* நாட்டின் மாசுபட்ட அனைத்து நதிகளையும் மீட்டெடுக்க வேண்டும்; மேலும் அவற்றை மாசுபடுத்தும் தொழிசாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* விவசாயிகளின் அனைத்து கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; கரும்பு நிலுவை தொகையை 14 நாட்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும், ஏற்கனவே விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

* பண்ணையின் பயன்பாட்டிற்கு மின்சாரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

* உழவர் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பத்தின் தலைவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க வேண்டும்.

* சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை செயல்படுத்தப்பட உள்ளது.

* நாடு முழுவதும் இலவசக் கல்வி மற்றும் இலவச மருந்துகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

* நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

Tags : Delhi ,Uttar Pradesh , Uttar Pradesh, farmers, Delhi, rally
× RELATED உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி...