சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்பு..: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மும்பை  உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. இந்த இடமாற்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதி தஹில் ரமானி கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடந்த 6ம் தேதி அவர் கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். மேலும், கடந்த 15 நாட்களாகவும் அவர் வழக்கு விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வக்கீல் கற்பகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பு  முடிவு செய்ய நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: