அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு தினமும் 1 மணி நேரம் கூடுதலாக விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம்ஜென்மபூமி- பாபர் மசூதி நில பிரச்னை வழக்கு திங்கட்கிழமை முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரிக்கப்படும்,’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ல் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த இடம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளும் சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள், தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது. .

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. வரும் அக்டோபர் 18ம் தேதியுடன் இந்த வழக்கின் வாதங்களை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், இந்த வழக்கை நேற்று 28வது நாளாக கோகாய் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கின் வாதங்களை வரும் அக்டோபர் 18ம் தேதியுடன் முடித்து கொள்ள வேண்டியிருப்பதால், வரும் திங்கட்கிழமை முதல் தினமும் கூடுதலாக ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெறும். இதன்படி, வழக்கமாக மாலை 4 மணியுடன் நிறைவடையும் விசாரணை, மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படும்,’ என அறிவித்தனர்.

Related Stories: