புதுடெல்லி: பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக ஹாக்கி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணிக்கு எதிராக 3 போட்டிகளிலும், ஸ்பெயின் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இம்மாதம் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூபிந்தர் பால் சிங், லலித்குமார் உபாத்யாய் இருவரும் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.