உலக மல்யுத்தம் பூனியாவுக்கு வெண்கலம்

நூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மங்கோலியாவின் துல்கா துமுர் ஆச்சிருடன் நேற்று மோதிய பஜ்ரங் தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் விளையாடி 0-6 என்ற கணக்கில் பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு மங்கோலிய வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்த பஜ்ரங் 8-7 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். அவர் கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2013ல் வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீரர் ரவி தாஹியா, 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் ஆசிய சாம்பியன் ரெஸா ஆத்ரி நாகார்ச்சியை (ஈரான்) வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் பங்கேற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் இது.

Advertising
Advertising

Related Stories: