அமெரிக்காவில் மோடி, டிரம்ப் பங்கேற்கும் ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு ஆபத்து : மிரட்டுகிறது புயல், மழை

ஹூஸ்டன்: ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்நிகழ்ச்சி நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பிரதமர் மோடி ஒருவார பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அப்போது 2வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி உள்ள அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற பெயரில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.  இதில் பங்கேற்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஹூஸ்டன் எனஆர்ஜி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் ேமாடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பல்வேறு மாநில கவர்னர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கு உருவாகியுள்ள  இமெல்டா புயல் காரணமாக ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. டெக்சாஸ் பகுதியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் 13 மாவட்டங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடத்தப்படுவதில் சிக்கல் வரலாம் என கருதப்படுகிறது. புயல் தீவிரமாகும் பட்சத்தில், கனமழை பெய்தால் இந்நிகழ்ச்சியை நடத்துவதில் சிரமம் ஏற்படலாம். ஆனாலும், ஹவ்டி மோடி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அமெரிக்கர்கள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: