×

24ம் தேதி தொடங்கும் பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க ஐநா பொதுச் செயலாளர் முடிவு? : பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே துஜார்ரிக் கூறி உள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்ததைத் தொடர்ந்து இப்பிரச்னையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா முறியடித்து வருகிறது. இந்நிலையில், ஐநா சபையின் 74வது பொதுச்சபைக் கூட்டம் நியூயார்க்கில் வரும் 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இக்கூட்டத் தொடரில் காஷ்மீர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்த பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது பற்றி ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ கட்டரெசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனே துஜார்ரிக் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பொதுச் செயலாளர் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். எனவே, இக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டால் அதை பொதுச் செயலாளர் பயன்படுத்திக் கொள்வார். இப்பிரச்னைக்கு இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதே சமயம் மனித உரிமைகள் அங்கு மதிக்கப்பட வேண்டியதும் அவசியம் என கூறி இருக்கிறார்,’’ என்றார்.

முன்னதாக, நேற்று முன்தினம் பேட்டி அளித்த ஐநா பொதுச் செயலாளர் கட்டரெஸ், ‘காஷ்மீரில் மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால் காஷ்மீர் விஷயம் குறித்து பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய ஐநா சபை தயாராக இருக்கிறது,’ என கூறியது குறிப்பிடத்தக்கது. ஐநா கூட்டத்தில் வரும் 27ம் தேதி ஒரே நாளில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்ற உள்ளனர். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் மிக வலுவாக எடுத்துரைப்பார் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஐநா.வுக்கான இந்திய தூதர் சையது அக்ருபதீன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் தரப்பிலிருந்து அனைத்து பதிலும் தரப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவர்கள் தரம் தாழ்ந்து போய் இவ்விவகாரத்தை எழுப்பினால், அதற்கான எங்களின் பதில் மிக வலுவானதாக இருக்கும்,’’ என எச்சரித்துள்ளார்.

இந்தியா சார்பில் ஐநா.வுக்கு ‘காந்தி சோலார் பூங்கா’ பரிசு

மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, வரும் 24ம் தேதி நியூயார்க் பல்கலை வளாகத்தில் மகாத்மா காந்தி அமைதி பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, காந்தியின் நினைவாக ஐநா.வின் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படுகிறது. இதுதவிர, ஐநா தலைமையக கட்டிடத்தின் மீது ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படும் காந்தி சோலார் பூங்காவையும் அவர் தொடங்கி வைக்கிறார். ஐநா.வில் 193 உறுப்பு நாடுகளின் சார்பாக 193 சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், 50 கிலோவாட் மின்சாரம் ஐநா கட்டிடத்திற்கு கிடைக்கும். பருவநிலை மாற்றத்தில் இந்தியா மிகுந்த கவனம் கொண்டிருப்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் இப்பரிசு அளிக்கப்படுவதாக இந்திய தூதர் அக்பருதீன் கூறி உள்ளார்.

Tags : General Assembly ,General Secretary ,Kashmir ,UN ,India ,Pakistan , UN General Secretary , discuss Kashmir issue,General Assembly,begins on 24th?
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...