கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் ஹார்டு டிஸ்க்் திருட்டில் சதியா? : உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில்  கடற்படைக்கு கட்டப்படும் ‘விக்ராந்த்’ விமானம் தாங்கி கப்பலில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதின் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.கேரள மாநிலம், கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு தேவையான கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இங்கு,  20 ஆயிரம் கோடி மதிப்பில் ‘விக்ராந்த்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்திய கடற்படையில் இருந்த ‘விக்ராந்த்’ விமானத்தாங்கி கப்பல் மிகவும் பழையதாகி விட்டதால்,சில ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது. எனவே, அதன் பெயரிலேயே இந்த புதிய கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கப்பலில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து சில ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கேரள டிஜிபி உத்தரவின் ேபரில் கொச்சி போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். மேலும், கடற்படை மற்றும் விமானப்படை உளவுத்துறையினரும் மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொச்சி கமிஷனர் விசாரணை அறிக்கையை நேற்று டிஜிபியிடம் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அதிக பாதுகாப்பு பகுதியில் இருந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது கடும் பாதுகாப்பு குறைபாடாகும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, கப்பலில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் 52 பேருக்கு செல்ல அனுமதி உண்டு. மேலும், வெளி நிறுவனங்களை சேர்ந்த 82 பேரும் கப்பலில் பணி புரிந்து வருகின்றனர். இது தவிர 500 ஒப்பந்த ெதாழிலாளர்களும் கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனது இந்திய போர் கப்பலுக்கான ஆவணங்கள் என்பதால் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தொழில் போட்டி காரணமாக யாராவது திட்டமிட்டு ஹார்டு டிஸ்க்குகளை திருடியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு, மொரீஷியஸ் நாடுகளுக்கு ராணுவ கப்பல்கள் தயாரிக்க கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் ேபச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கப்பல் கட்டும் தொழிலில் முதலீடு செய்துள்ள ஒரு தனியார் நிறுவனமும் இந்த நாடுகளுடன் கப்பல் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சி நடத்தியது.

அதனால் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. விக்ராந்த் போர்க்கப்பல் பணிகள் முடிந்ததும், 40 ஆயிரம் கோடி செலவில் ஒரு நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் பொறுப்பை கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் இருந்து கொச்சி கப்பல் கட்டும் தளத்தை தவிர்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய திட்டத்தின் டெண்டர் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக தகுதி பட்டியலில் இருந்து கொச்சி கப்பல் கட்டும் மையம் நீக்கப்பட்டது. இந்த தகுதி பட்டியலில் மத்திய அரசுக்கு நெருக்கமான 4 தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவும் சந்தேகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 31 கம்ப்யூட்டர்கள்

‘விக்ராந்த்’ விமானத்தாங்கி கப்பலில் மொத்தம் 31 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதில், 5 கம்ப்யூட்டர்களில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. இந்த டிஸ்க்குகளில் அதிபாதுகாப்பு மிகுந்த கப்பலின் வரைபடம், போர் ஆயுதங்கள் எங்கெங்கு வைக்கப்பட்டிருக்கும், கப்பலுக்கு எந்தெந்த வழியில் செல்லலாம் என்பன போன்ற முக்கிய விபரங்கள் உள்ளன.

Related Stories: