சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை பிடுங்கி எறிந்த போலீஸ்காரர்

தாம்பரம்: தாம்பரம் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை போலீசார் ஆத்திரத்தில் பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு எதிரே சாலையோரம் தனியார் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள இந்த பேனர்களை அகற்ற வேண்டும், என அப்பகுதி மக்கள் பலமுறை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், சிட்லபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் கதிரவன் என்பவர் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையம் செல்லும் வழியில் தனியார் வீடு விற்பனை மற்றும் ஜிம் விளம்பர பேனர்களை ஆங்காங்கே இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார்.

பின்னர், அவரது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்த விளம்பர பேனர்களை கையாலேயே பிடுங்கி தூக்கி எறிந்தார்.
பொதுவாக பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்து அவர்கள் மூலமாகத்தான் அகற்றுவார்கள். ஆனால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததினாலும், அதுபோன்ற பேனர்களால் விபத்துகள் ஏற்படும் எனவும், தலைமை காவலரே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்களை பிடுங்கி தூக்கி எறிந்தார்.இதனை கண்ட பொதுமக்கள் அவரிடம் சென்று, ‘‘நகராட்சி அதிகாரிகள் செய்யவேண்டியதை நீங்கள் ஏன் செய்கின்றீர்கள்?,’’ என கேட்டதற்கு சமீபத்தில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் இழப்பு என்னை மிகவும் பாதிக்க செய்துவிட்டது. அதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை நானே அகற்றி வருகிறேன், என கூறிவிட்டு சென்றார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : policeman , Policeman who grabbed , advertising banner ,roadside
× RELATED அம்பத்தூர் நீதிமன்றத்தில்...