×

பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

துரைப்பாக்கம்: பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரிவர பணிக்கு வராததால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செம்மஞ்சேரி அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக, ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு நியமிக்கப்பட்ட 2 மருத்துவர்களும் பணிக்கு வருவதில்லை. இதுபற்றி பொதுமக்கள் கேட்டால் மருத்துவ விடுமுறையில் உள்ளதாக தெரிவிக்கின்கின்றனர். தற்போது ஒரு மருத்துவர் மட்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள மருத்துவரோ காலை 10 மணிக்கு வந்து மதியம் 2 மணி வரை மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இதனால் செவிலியர்கள், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வார்டு இல்லாததால் கர்ப்பிணிகளை பிரசவத்துக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சென்றால் அடுத்த முறை உங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளை வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் மற்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க தனி வார்டு உள்ளது. ஆனால் இங்கு மட்டும் பிரசவத்திற்கு தனி வார்டு இல்லை. மேலும், ரத்த அழுத்தம், நீரழிவு நோய், பெண்களுக்கான கர்ப்பப்பை சோதனை உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் இங்கு மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. சிறிய மழை பெய்தாலே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் சகதியில் தடுமாறி கீழே விழுந்து சேறும் சகதியுமாக செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : doctors ,health care center ,health care facility , Majority have difficulty, getting treatment , lack of doctors , primary health care facility
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை