மாமல்லபுரம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கிய இலங்கை, நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது

சென்னை: மாமல்லபுரம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இலங்கை, நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். உலக அளவில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிற மாமல்லபுரத்திற்கு வருகிற அக்டோபர் 11ம் தேதி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் 3 நாள் பயணமாக வருகின்றனர். அவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். மேலும், சீனா - இந்தியா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இருவரின் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உயரதிகாரிகளின் உத்தரவின்படி மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஐ.க்கள் மோகன், சதாசிவம் மற்றும் போலீசார் மாமல்லபுரம் லாட்ஜ், ரெஸ்டாரண்ட், வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எதற்காக இங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வாடகை வீட்டில் செக்குவா ஓன்வு மெரா ஜெப்பானியா (36) என்பவர் வசித்து வருவது தெரிந்தது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பாஸ்போர்ட், விசா தொலைந்து போனதால் கோவா, பெங்களூரு என சுற்றியுள்ளார். பிறகு மாமல்லபுரம் வந்து, வெண்புருஷத்தில் 6 மாதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுபோல், கோவளம் அருகே இசிஆர் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கேளம்பாக்கம் போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ராஜநாயகம் (42) என்பவர் தங்கியிருப்பது தெரியவந்தது. விசாரணையில், ராஜநாயகம் கடந்த 2009ல் இலங்கையில் இறுதிகட்ட போர் முடிந்தவுடன் சென்னைக்கு தப்பி வந்ததாகவும், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்ததும் தெரியவந்தது. பிறகு ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் செம்மஞ்சேரி பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து, பெயின்டிங் வேலை செய்துள்ளார். சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக ராஜநாயகம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சீன அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்  மாமல்லபுரத்திற்கு வருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, சீன வெளியுறவு மற்றும் பாதுகாப்பு, சுற்றுலா அதிகாரிகள் 50 பேர் குழு நேற்று மாமல்லபுரத்திற்கு வந்து, முக்கிய பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தனர்.

Related Stories: