கந்தன்சாவடி பகுதியில் சுகாதாரமற்ற உணவகத்துக்கு சீல்

துரைப்பாக்கம்: கந்தன்சாவடி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை கந்தன்சாவடி, எம்.ஜி.ஆர் சாலையில் ஐ.டி. நிறுவனங்களும், அதனை ஒட்டிய பகுதியில் பல சிறு, குறுந்தொழில் நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை குறி வைத்து அதே பகுதியில் உணவுங்கள், பிளாட்பார கடைகள் புற்றீசல் போல் முளைத்தன. இந்த ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில், ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சந்தியப்பன் சாலை, இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு உணவகம் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவது தெரிந்தது. அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், திறந்தவெளியில், கழிவுநீர் கால்வாய் மீது வைக்கப்பட்டிருந்த உணவகத்தின் தளவாடப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அதே பகுதியில் செயல்படும் 16 உணவகங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமாக உணவு தயாரித்து வழங்கும் படி, எச்சரிக்கை செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: