அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்.. மாயமான வரத்து கால்வாய்கள்.. கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு.. புழல் ஏரியை தூர்வார ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

புழல்: சென்னை அருகே அமைந்துள்ள புழல் ஏரி 3.30 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், நீர்பிடிப்பு பகுதி தூர்ந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த ஏரியில் முழு கொள்ளளவு நீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த கோடை காலத்தின்போது, ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டதால், மழைக்காலம் தொடங்கும் முன்பு துார்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன், ஏரியின் மதகு பகுதியில் பெயரளவுக்கு கரை பலப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால், ஏரியின் நீர்பிடிப்பு பகுதி தூர்ந்தும், முட்புதராகவும் காட்சியளிக்கிறது. குறிப்பாக, சூரப்பட்டு பகுதி அருகே ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.

இந்த ஏரி செங்குன்றம், சாமியார் மடம், நாரவாரிகுப்பம், ஆலமரம் பகுதி, அன்னை இந்திரா நகர், பம்மதுகுளம், கோணிமேடு, லட்சுமிபுரம், சரத்கண்டிகை, எரான்குப்பம், பொத்தூர், கன்னடபாளையம், உப்பர்பாளையம், திருமுல்லைவாயல், ஒரகடம், கள்ளிக்குப்பம், பானு நகர், முருகமேடு, சூரப்பட்டு, சண்முகபுரம், மேட்டூர், புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பரந்து விரிந்துள்ளது. ஆனால், ஆலமரம் பகுதியிலிருந்து சூரப்பட்டு, மேட்டூர் வரை புழல் ஏரிக்கு கரைகள் அமைக்கப்படவில்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் சிலர் ஏரி பகுதிகளை ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டியுள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பை ஆகியவை ஏரியில் விடப்படுவதால், ஏரி மாசடைந்து வருகிறது. தனியார் சிலர் லாரிகளில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டுவதால் நிலத்தடி நீர் நஞ்சாக மாறும் அவலம் உள்ளது. முக்கிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் மழைக்காலங்களில் நீர் வரத்து தடைபட்டுள்ளது.

இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன் புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தும், புழல் ஏரியில் சிறிதளவு நீர் கூட தேங்கவில்லை. இதுஒருபுறம் இருக்க, நீர்பிடிப்பு பகுதிகள் தூர்ந்துள்ளதால் இனி வரும் மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, புழல் ஏரியை தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தவும், முட்புதர்களை அகற்றி, கரைகளை பலப்படுத்தவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: