பெண்ணிடம் 7 சவரன் அபேஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

பெரம்பூர்: பெண்ணின் 7 சவரன் நகையை அபேஸ் செய்த விவகாரம் தொடர்பாக ஏட்டு மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (55). இவரது வீட்டில் முனீஸ்வரி (35) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு விஜயலட்சுமி வீட்டில் வைத்திருந்த 7 சவரன் நகை மாயமானது. இதுபற்றி முனீஸ்வரியிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, விஜயலட்சுமி தனக்கு தெரிந்தவரான புழல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் பிரபாகரன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ஏட்டு பிரபாகரன் முனீஸ்வரியை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது, அவர்தான் நகையை திருடியது தெரிந்தது. மேலும், திருடிய நகையை அருகில் உள்ள அடகு கடையில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. பின்னர், முனீஸ்வரியை சம்மந்தப்பட்ட அடகு கடைக்கு அழைத்து சென்ற ஏட்டு பிரபாகரன், அடகு வைத்திருந்த நகையை பறிமுதல் செய்துள்ளார். ஆனால், அந்த நகையை விஜயலட்சுமியிடம் கொடுக்காமல் அபேஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி, ஏட்டு பிரபாகரனிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்துள்ளார். பலமுறை அலைந்தும் ஏட்டு பிரபாகரன் நகையை தராததால் வேதனையடைந்த விஜயலட்சுமி, இதுகுறித்து கமிஷனர் அலுவலத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதில், ‘‘எனது நகை திருட்டு குறித்து புழல் காவல் நிலைய ஏட்டு பிரபாகரனிடம் புகார் அளித்தேன். அவர், நகையை மீட்டு தருவதாக என்னிடம் கூறினார். ஆனால் அடகு கடையில் இருந்து வாங்கிய எனது நகையை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். எனவே, அவரிடமிருந்து நகையை மீட்டு தர வேண்டும்,’’ என குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து விசாரிக்கும்படி ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார், ஏட்டு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண்ணின் நகையை அபேஸ் செய்ததாக போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஏட்டு பிரபாகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதும், கடந்த 2016ம் ஆண்டு குற்ற செயல் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: