பாலாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம் 4 வாரத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் : ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி : பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பான ஆவணங்களை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. பாலாற்றில் ஏற்கனவே ஆந்திர அரசு பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியதால் வெள்ள காலங்களில் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ரூ.50கோடி செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இதற்கு , தமிழக விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 1892ம் ஆண்டு போடப்பட்ட அப்போதைய மதராஸ்-மைசூர் சமஸ்தானங்களுக்கு இடையே ஒப்பந்தமும் இதில் மீறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலாறு அணை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலாறு அணை தொடர்பான வழக்கில் ஆந்திர அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசு தரப்பில் வழக்கு தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், 4 வாரம் அவகாசம் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: