பொதுமக்களுக்கு தளத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க மறுப்பதா? வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: பொதுமக்களுக்கு தகவல் தளத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு தவறான மற்றும் வதந்திகள் அந்த தளத்தில் பரப்பப்படும்போது அதற்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் சமூக வலைதள கணக்குகள் தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம், ஆனால் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  ‘‘ பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பகிர ஒரு தளம் அமைத்துக்கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. அந்த நிறுவனத்துக்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இந்தியாவுக்குள் வரும்போது அந்நிறுவனம் இந்திய நாட்டின் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்றனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்தியாவில் சமூக வலைதளங்களை கண்காணித்து, தவறான தகவல்களை பரப்பாமல் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. அதற்காக அரசின் இறுதிமுடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சமூக வலைதளங்களுக்கான குறைதீர் ஆணையம் மற்றும் நிர்வாகியை நியமிக்கும் விசயத்தில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

Related Stories: